நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 09, 2018

ஸ்ரீ தேவி தரிசனம்

இன்று வெள்ளிக் கிழமை..

அதுவும் ஹேவிளம்பி வருடத்தின் தை கடைசி வெள்ளி..

அம்மன் கோயில்களின் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் நாள்..

இந்தப் பதிவினை
இன்று காலையில் வெளியாகுமாறு செய்திருக்கவேண்டும்...

மனதில் ஒரு கோளாறு..
அதனால் விளைந்த உளைச்சலில் காலதாமதமாகி விட்டது...

இன்று காலை வேலை முடிந்து திரும்பியதும் 
நித்ய வழிபாட்டுக்குப் பின் - இதோ தங்களுடன்!...

ஸ்ரீ வீரமாகாளியம்மனின் தரிசனம்!..

ஸ்ரீ வீரமாகாளியம்மன் - உற்சவத் திருமேனி
இவளுடைய திருக்கோயில் சுவாமிமலையை அடுத்துள்ள 
நாககுடி எனும் சிற்றூரில் அமைந்துள்ளது...

ஸ்ரீவீரமாகாளி அம்மனுக்காக -
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிதாக கோயில் எழுப்பட்டது...

புதிதாக ஆலயத்தினை எழுப்பிய வேளையில்
திருக்கோயில் கட்டுமானப் பணியில் 
என்னையும் இணைத்துக் கொண்டாள்...

அத்துடன் -
திருமூலத்தானத்தினுள் அவளுடன் திகழும் அம்சங்களுள் 
எனது பங்கினையும் ஒன்றாக ஏற்றுக் கொண்டாள்..

அதுமட்டுமல்லாது -
அவளுக்கென பஞ்சலோகத்தில்
உற்சவத் திருமேனியை வார்த்த போதும்
அதில் எனக்கொரு வாய்ப்பினைத் தந்தாள்...

அவளுக்கான யாகபூஜைகளின் போதும் 
திருவிழாக் காலங்களிலும் காவிரியில் இருந்து 
தீர்த்தம் எடுத்து வரும் உரிமையையும்
எனக்கு அளித்து மகிழ்ந்தாள்..

எல்லாவற்றிற்கும் மேலாக -
அவளுடைய வழிபாட்டு முறைகளை வகுத்தபோது
மூலஸ்தானத்தில் அம்பிகையின் திருமேனிக்கு
அபிஷேக அலங்காரங்களை நிகழ்த்தி 
ஆராதனையைச் செய்யும் பெரும் பேற்றினையும் நல்கினாள்...


இப்போது நடந்த கும்பாபிஷேகத்தின் போதும் 
மூலஸ்தான நிலையினை பஞ்சலோகத் தகடுகளால் 
அலங்கரிக்கும் திருப்பணியை எனக்களித்துக் களித்தாள்..

இதற்கெல்லாம் நான் அருகதையுடையவனா?... 

எனில் - இல்லையென்றே சொல்லலாம்..

இருந்தாலும் - மானிடப் பிறப்பில்
கோபமும் தாபமும் குற்றமும் குறைகளும் இருக்கும் தானே!.. 

என் பிள்ளை!.. - என்று,
என் அன்னை என்னையும் ஏற்றுக் கொண்டாள்...

இத்தனைக்கும் நான் என்ன தவம் செய்தேனென்று தெரியவில்லை..

என் பெற்றோரின் தவப்பயனும்
என் முன்னோர்களின் நல்லாசிகளும் அன்றி -
வேறொரு காரணம் இருக்க இயலாது..

இன்றைக்கு எங்கள் முழுக் குடும்பத்திற்கும்
அன்னை துணையாய் நிற்கின்றாள் எனில் அது மிகையில்லை..

சென்ற 2017 ஜூலையில் 
இரண்டாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது...

மண்டலாபிஷேக வைபவத்தின் போது 
காலையில் யாக பூஜையும் மண்டலாபிஷேகமும்
மாலையில் சந்தனக்காப்பு அலங்காரமும் நிகழ்ந்தன..

அம்பிகைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்வித்தவர்
சுவாமிமலை - திரு கணேச சிவாச்சார்யார்..

பதிவிலுள்ள படங்கள் எளியேனால் எடுக்கப்பட்டவை...

இதோ
திருக்கோயில் தரிசனம்..
***
ஸ்ரீ வலம்புரி விநாயகர்





ஸ்ரீ நாக பிரதிஷ்டை



சந்தனக்காப்பு அலங்காரம்
அம்பிகையின் வலப்புறம் ஸ்ரீமதுரை வீரன்.. இடப்புறம் ஸ்ரீகருப்பஸ்வாமி..
பதிவில் முதலாவதாக இருக்கும் படமும்
இதன் கீழுள்ள மூன்று படங்களும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த
சித்திரைத் திருவிழாவின் போது எடுக்கப்பட்டவை..




அவளுக்காக இன்னும் பல - செய்திட ஆசையுண்டு...
அதற்கான அருளையும் பொருளையும் அவளே அருளுவாள்..

ஸ்ரீ வீரமாகாளி 
போற்றி.. போற்றி...

ஓம் சக்தி ஓம்!.. 
*** 


9 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    அன்னையில் அருள் தங்களுக்கு என்றும் உண்டாகும். அழகிய புகைப்பட தரிசனம் கண்டேன்.
    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  2. பேறு பெற்றவர் நீங்கள். நாங்களும் உங்கள் உதவியில் தரிசனம் செய்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  3. நாக குடி அல்லது நாகங்குடி? நாகங்குடியில் எங்கள் உறவினர்கள் இருந்தனர்! வீரமாகாளியின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி. உங்கள் குலதெய்வம் இன்று போல் என்றென்றும் உங்கள் குடும்பத்தினரைக் காத்து வருவாள். தங்கள் அளப்பரிய தொண்டு சிறப்பு மிக்கது.

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீ வீரமாகாளி உங்கள் மன உளைச்சலைத் தீர்த்து இருப்பாள் அவளைப்பற்றி எழுதியவுடன். புத்துணர்வு அடைந்து இருப்பீர்கள்.
    நல் உள்ளத்தை தன் கோவில் திருப்பணியில் சேர்த்து கொண்டது அறிந்து மகிழ்ச்சி.
    படங்கள் எல்லாம் நேரில் அம்மனை கண்ட மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஐயா
    தங்களின் உடல் நிலை நலம்தானே
    கவனித்துக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  6. மிக சிறப்பான தரிசனம்....

    பதிலளிநீக்கு
  7. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். பதிவினைக் கண்டதில் மகிழ்ச்சி. இக்கோயிலுக்குச் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன்.

    பதிலளிநீக்கு
  8. துளசி: இக்கோயிலைப் பற்றி அறிந்ததில்லை. தேவி தரிசனம் கிடக்கப் பெற்றோம். தங்களுக்கும் தேவியின் அருகில் இருந்து சேவை செய்யக் கிடைத்தது மிகப் பெரிய பேறு. படங்களும் சிறப்பு. எல்லோருக்கும் நல்லது நடந்திடட்டும்!

    கீதா: துரை அண்ணா இந்தப் பதிவினை முதலில் தவறவிட்டதற்கு மன்னிக்கவும்.

    எத்தகைய பேறு பெற்றிருக்கின்றீர்கள்!!! மூலஸ்தான நிலையைப் பஞ்சலோகத் தகடுகளால் அலங்கரிக்க கிடைத்த பேறு!!! வாசிக்கும் போது புல்லரித்தது அண்ணா...

    உங்கள் பதிவின் மூலம் இக்கோயிலைப் பற்றியும் அறிந்து கொண்டோம். தேவியின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.

    படங்களும் அழகாக இருக்கின்றன. தங்களின் உடல் நலம் விரைவில் சரியாகிடப் பிரார்த்தனைகள். தேவியும் இறைவனும் தங்களுடன் எப்போதும் இருப்பார்கள்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..