நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 14, 2017

நெல் அளந்த ஈசன்

எல்லா வளங்களும் ஒருங்கே அமையப்பெற்ற
சோழ வளநாட்டில் மூலாதாரத் திருத்தலமாகத் திகழ்வது
திரு ஆரூர்..

திருஆரூருக்கு சற்று தெற்கே விளங்குவது திருக்கோளிலி..
திருக்கோளிலிக்கு அருகே உள்ள கிராமம் குண்டையூர்..


இவ்வூரைச் சேர்ந்தவர் குண்டையூர்க் கிழார்..
மிகுந்த செல்வம் படைத்தவர்..

அற்றார் மீதும் அலந்தார் மீதும் பரிவு கொண்டவர்..
சிவனடியார் தம்பால் பற்றுடையவர்..

அனைத்திற்கும் மேலாக 
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளிடம் அன்பு கொண்டவர்..

வருடந்தோறும் தவறாமல்
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் இல்லத்திற்கு 
நெல் அளக்கும் மாண்பினை உடையவர்...



ஒருமுறை மழைமேகம் தவறியதால்
வளம் குன்றியது.. இடர்பாடு வந்துற்றது..
விளைச்சல் குறைந்தது..


ஏழைபாழைகளுக்கும் கிராமத்தின் குடியானவர்களுக்கும்
நெல் அளக்கும் முறைமை உடையவர் கிழார்..

அதற்கெல்லாம் பண்டாரத்தில்
மூட்டை மூட்டைகளாக குவிந்து கிடக்கின்றன...

ஆனால்,
சுந்தரருக்கு புது நெல் அளப்பதில்
குறைவு வந்துற்றதே!..
என, மருகினார்.. உள்ளம் உருகினார்...

அந்த நினைவுடனேயே உணவேதும் கொள்ளாமல்
உறங்கிப் போனார்..

குண்டையூர் கிழாரின் நல்ல மனதை
அனைவரும் உணரும்படிக்குச் செய்திட
எல்லாம் வல்ல இறைவன் திருவுள்ளம் கொண்டான்...

அந்த அளவில்
நீரின்றி வறண்டு கிடந்த நிலத்தில்
நெல்மணிகள் சிறிது சிறிதாகக்
குவியத் தொடங்கின...

கொடுப்பவர் கொடுக்க நினைத்த கொடையல்லவா!..

குண்டையூர்க் கிழார் கொடுக்க நினைத்தது
குன்றென வளர்ந்தது நின்றது..

விடியற்பொழுதில் விழித்தெழுந்த கிராமம்
குண்டையூர் கிழாரின் வயலில்

வளர்ந்து நின்ற நெற்குன்றத்தைக்
கண்டு திகைத்து நின்றது..

பரவசம் மிகவாகி ஓடி வந்த கிழார்
ஈசன் எம்பெருமானின் கருணையை வியந்து நின்றார்..

உடனடியாக சுந்தரருக்கு ஓலை சென்றது..

தகவலறிந்து விரைந்து வந்த சுந்தரர்
நெல்மலையைக் கண்டு வியந்து நின்றார் ..


ஐயனே!.. இந்த நெல்மலை தங்களுக்கானது.. 
இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு அருளவேணும்!..

மகிழ்வுடன் கொடையை வழங்கினார் - கிழார்...

இந்த நெல்மலையை நான் எப்படி ஆரூருக்கு எடுத்துச் செல்வது?.. 
எனவே - எம்பெருமான் ஆட்களை அனுப்பித் தர வேண்டும்!.. 

வண்டமருங் குழலாள் உமைநங்கை ஓர்பங்குடையாய்
விண்டவர் தம்புரமூன்று எரிசெய்த எம்வேதியனே
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக்கோளிலி எம்பெருமான்
அண்டமதாயவனே அவை அட்டித்தரப் பணியே!..(7/20)

என, இறைவனிடம் விண்ணப்பித்துக் கொண்டார் - சுந்தரர்..
  
அதற்கு இசைந்த எம்பெருமான் - 
பூதகணங்களை அனுப்பி வைத்தார்..

அந்த பூத கணங்கள் சுந்தரரிடம் கூறின..

ஐயனே.. இந்நெல்மலையை நொடிப் பொழுதில்
திருஆரூரில் தங்களது இல்லத்தில் நிறைத்து விடுகின்றோம்!..

அதைக் கேட்டு உவந்த சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்
தாம் பெற்ற பயனை அனைவரும் பெறட்டும்!.. 
எனத் திருவுளங்கொண்டார்..

எம்முடைய இல்லத்தில் மட்டுமல்லாமல்
எல்லாருடைய இல்லத்திலும் நிறைந்து விடுங்கள்!..
- என்று, அன்புக் கட்டளையிட்டார் சுந்தரர்..

அந்த அளவில் பூத கணங்கள்
திருஆரூர் முழுதும் நெல்லை நிறைத்து விட்டு
திருக்கயிலைக்குச் சென்று சேர்ந்தன..


சுந்தரர் - தான் பெற்ற நெல் மலையை 
திருஆரூரில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும்
பகிந்தளித்து மகிழ்ந்தார் - என்பது திருக்குறிப்பு..

இன்றளவும் மாசி மகத்தன்று

பூத கணங்கள் நெற்கோட்டை வழங்கும் 
திருவிழா திருஆரூரில் 
நடைபெறுவது குறிப்பிடத்தக்கது..


சில தினங்களுக்கு முன் - மாசி மகத்தன்று
 பூத வடிவம் தாங்கி நெற்கோட்டைகளுடன் 
திருக்கோளிலியில் இருந்து திருஆரூருக்குச் செல்லும்
திருவைபவம் நிகழ்ந்துள்ளது..

அந்த வைபவத்தின் காணொளியும்
படங்களும் இன்றைய பதிவில்!..

Fb ல் வழங்கிய சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
மனமார்ந்த நன்றி..

ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்








நேற்று (13/3) திருக்குவளையில் புறப்பட்ட 
பூத கண நெல் வைபவம் திரு ஆரூரைச் சென்றடைந்ததும்
இன்று (14/3) திரு ஆரூரில்
பங்குனி உத்திரப் பெருவிழாவிற்கான 

கொடியேற்றம் நிகழ்கின்றது..


திருக்கோளிலி
இன்றைய நாளில்
திருக்குவளை என்று வழங்கப்படுகின்றது..

இத்தலம்

திருவாரூர் - எட்டுக்குடி வழித்தடத்தில் உள்ளது..
  
திருக்காறாயில், கச்சனம், திருநெல்லிக்கா, திருவாய்மூர்
ஆகிய தலங்கள் இவ்வூருக்கு அருகே அமைந்துள்ளன..

கோள்களின் கொடுவினைகள் 
இல்லாத திருத்தலம்
திருக்கோளிலி..


இறைவன் - ஸ்ரீ பிரம்மபுரீசர், கோளிலி நாதர்
அம்பிகை - ஸ்ரீ வண்டமர் பூங்குழலாள்
தீர்த்தம் - மணிகர்ணிகை, அகத்திய தீர்த்தம்
தலவிருட்சம் - தேற்றா மரம்

சப்த விடங்கத் திருத்தலங்களுள் ஐந்தாவது திருத்தலம்
தியான நிலையில் விசுக்தி என்று குறிக்கப்படுவது..

அவனி விடங்கர் - பிருங்க நடனம்
வண்டு போல ஆடுவது..

நான்முகப் பிரம்மன் எம்பெருமானை வணங்கி
படைப்புத் தொழிலை மேற்கொண்ட தலம் என்பர்...

வெண்மணலால் ஆகிய சிவலிங்கம்...
எனவே, அபிஷேகங்கள் குவளை சாத்தி நடைபெறுகின்றது..
அமாவாசை தோறும் சிவலிங்கத் திருமேனியில்
சாம்பிராணித் தைலம் சாற்றப்படுகின்றது..


நான்முகன் இத்திருத்தலத்தில்
படைப்புத் தொழிலை மேற்கொண்டு
ஜீவராசிகளைப் படைத்ததால்
நவக்கிரக தோஷங்கள் கிடையாது..

இத்திருக்கோயிலில்
நவக்கிரக மண்டலமும் கிடையாது..

திருஆரூரில் போன்று
நவக்கிரகங்கள் நேராக விளங்குகின்றனர்..

இத்தலத்திற்கு
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
ஆகியோர் திருப்பதிகம் அருளியுள்ளனர்..

நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய் நங்கிளை கிளைக்கும் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே!..(1/62)

எந்த ஒருநாளையும் வீணாக்காமல்
கோளிலி எம்பெருமானுக்கு ஆளாகி 
அன்புடன் அவனது 
திருப்பெயரைக் காதாரக் கேட்டாலும் போதும்..
நமது சந்ததி தழைக்கும்.. 
கேடு ஏதும் வாராத வாழ்வு கிடைக்கும்..
கோள்களின் கெடுபலன்களும் அகலும்!..
- என்று அருளுரை வழங்குகின்றார் - ஞானசம்பந்தப்பெருமான்..

இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் சொல்லுங்கள்!..

முத்தினை முதலாய மூர்த்தியை
வித்தினை விளைவாய விகிர்தனைக்
கொத்தலர் பொழில்சூழ்தரு கோளிலி
அத்தனைத் தொழ நீங்கும்நம் அல்லலே!..(5/56)
- திருநாவுக்கரசர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

16 கருத்துகள்:

  1. அன்பின் ஜி திருஆருர் பற்றிய வரலாறு அறியத் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. குண்டையூர் கிழாரின் தகவல்கள் அனைத்து சிறப்பு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருக்காறாயில், கைச்சினம், திருநெல்லிக்காவல், திருஆய்மூர் ஆகிய தலங்களுக்குச் சென்றுள்ளேன். திருக்கோளிலி இறைவனைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. எத்தனை கோவில்கள் எத்தனை விழாக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      இத்தனை கோயில்களையும் காண்பதற்கு எத்தனை நாளாகுமோ!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அரியதொரு பதிவிற்கு நன்றி நண்பரே! 'திருக்கோளிலி' இன்று 'திருக்குவளை' என்று அழைக்கப்படுகிறது என்கிறீர்களே, கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறந்த அதே திருக்குவளையா?
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      கலைஞர் அவர்களின் சொந்த ஊராகிய திருக்குவளை தான் திருக்கோளிலி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. சிறப்பான ஒரு கோயில் பற்றிய தகவல்கள்.... நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  8. கண்டிராத ஓர் அழகான கோயில் பற்றிய தகவல்களும் படங்களும் அருமை ஐயா! மிக்க நன்றி பகிர்விற்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..