நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


புதன், நவம்பர் 22, 2017

கனலில் கலந்த கனல் 1

மன்னவனே ஆனாலும்
பொன்னளந்து கொடுத்தாலும்
பெண் மனதை நீ அடைய முடியாது!..
வாள் முனையில் கேட்டாலும்
வெஞ்சிறையில் போட்டாலும்
உடலன்றி உள்ளம் உனைச் சேராது!..
***

ஆனால்,
அந்த உடலைக் கூட
மாற்றான் கண்களுக்குக் காண்பிக்காமல்
அக்னிக் கொழுந்துகளுக்குள்
குழம்பாக்கிக் கொண்டாள் - மாதரசி ராணி பத்மினி!..

அவள் மட்டுமல்ல..
அவளைப் போல் ஆயிரமாயிரம்..
அரசி முதல் அந்தப்புரச் சேவகி வரைக்கும்!..

அந்த ஆரணங்குகளின் திருவடித் தாமரைகள்
அடியனின் தலையின் மேல்!..எழுபத்து நான்காயிரத்து
நானூற்று தொண்ணூற்றொன்பது
திருமேனிகளுக்குக் கீழாக -

ராணி பத்மினியின் பொன்னுடல்!..

ஆம்.. எழுபத்து நான்காயிரத்து ஐநூறு மாதரசிகள்!..

புண்ணிய பாரதத்தின் வடமேற்கு எல்லையான ராஜஸ்தானத்தில்
எழுநூற்றுச் சொச்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது!..

இந்நிகழ்வு நடந்தாகச் சொல்லப்படுவது - 
1303 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில்!..

ராஜஸ்தானம் என்றாலும் அதற்குள் பற்பல நாடுகள்..
அவற்றுள் வலிமை மிக்கதாக விளங்கிய நாடு மேவார்...

போர் தொடங்கிய பத்து நாட்களுக்குள்
இந்த கோர சம்பவம் நடந்து முடிந்திருக்கின்றது..

இத்தகைய கோரம் நிகழ்வதற்குக் காரணம் - மாற்றானின் படையெடுப்பு..

படையெடுக்கும் யாருக்கும் -
அந்நாட்டை அடிமைப்படுத்தி
அதனை தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதும்
அதன் செல்வங்களைக் கைப்பற்றுவதும் தான் நோக்கமாக இருக்கும்..

இங்கேயும் அப்படித்தான்.. ஆனால்,
நோக்கம் பொன் அல்ல.. பொருள் அல்ல!..

பெண்.. அழகே உருவான மங்கை..
அதுவும் இன்னொருவனின் மனைவி!..

இத்தகைய கயமையுடன் வந்தவன் - அலாவுதீன் கில்ஜி!..

இவன் தான் -

தில்லியை 1290 முதல் 1296 வரை ஆட்சி செய்த கில்ஜி வம்சத்தின் முதல் சுல்தானும் தனது மாமனும் ஆகிய ஜலாலுதீன் பைரூஸ் கில்ஜியை வஞ்சகத்தால் போட்டுத் தள்ளி விட்டு ஆட்சியைப் பிடித்தவன்..

24 பிப்ரவரி 1296 அன்று
பன்னிரு ஜோதி லிங்க ஸ்தலங்களுள் ஒன்றாகிய சோமநாதபுரம் 
ஸ்ரீசோமேஸ்வரர் திருக்கோயிலைத் தகர்த்து எறிந்தவன்..

பின்னும் வெறி அடங்காதவனாக
அடுத்த சில மாதங்களில் - துவாரகாபுரியில் விளங்கிய
ஸ்ரீகிருஷ்ணன் திருக்கோயிலையும் தரைமட்டமாக்கியவன்..

அத்தோடு நில்லாமல் -
குஜராத் மன்னன் இரண்டாம் கர்ணதேவனை வீழ்த்திய பின் 
நிர்க்கதியாக நின்ற பட்டத்தரசி கமலாதேவியைக் கவர்ந்து சென்று
மத மாற்றம் செய்து திருமணம் என்ற பேரில் நாசம் செய்தவன்..

மகாராணி கமலாதேவியை சிறை பிடித்த வேளையில் -
உடனிருந்த அந்தப்புர சேவகனையும் இழுத்துக் கொண்டு போனார்கள்..

அவனது பெயர் - சந்த்ராம்..

ஆணாக இருந்தும் ஆண் தன்மையற்றவன் சந்த்ராம்...
சந்த்ராமின் அழகைக் கண்டு மயங்கினான் - கில்ஜி..

விளைவு!?..

அவனையும் மதமாற்றம் செய்தான்..
அவனுக்கும் புதுப் பெயர் ஒன்றை வைத்தான்..

அந்தப் பெயர் - மாலிக் கபூர்..

அந்தப்புர நங்கையர் பலர் இருந்தும்
மாலிக் கபூரையும் மலர்ப் படுக்கையில் தள்ளியவன் - கில்ஜி!..

அலாவுதீன் கில்ஜி மீண்டும் வெறி கொண்டு 
ரந்தம்பூர் எனும் ராஜபுத்திர நாட்டின் மீது படையெடுத்தான்..

வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவும் நேரத்தில்
மன்னன் அமிர்தேவனின் மந்திரிகள் நாட்டைக் காட்டிக் கொடுத்தனர்..

வீழ்ந்தான் அமிர்தேவன்.. 
அவனது ராணியும் தன் மானம் காக்க தீக்குளித்து மாண்டாள்..

தில்லி சுல்தானாக அமர்ந்த ஏழாண்டுகளுக்குள்
எத்தனை எத்தனையோ கொடுமைகளை அரங்கேற்றி
குருதியில் குளித்து எழுந்த குரூரன் - கில்ஜி..

இத்தனை நடந்தும் வெறி அடங்காதவனாக
மீண்டும் படை திரட்டிக் கொண்டு சென்றான்..

ராஜபுத்திர நாடுகளுக்குள் வெல்ல முடியாதபடிக்கு
பெரும் கோட்டையுடன் விளங்கிய நாடு - மேவார்...

இந்நாட்டின் கோட்டை சித்தோர்கர் (Chittorgarh).. 
சித்தூர் கோட்டை எனவும் சொல்லப்படும்..

படை நடத்திச் சென்றதன் நோக்கம் - மேவாரைக் கைப்பற்றுவதல்ல..

அந்த நாட்டின் மகாராணி பத்மினியைக் கவர்ந்திட வேண்டும்!..

மேவார் நாட்டின் அரசன் ரத்தன் சிங்..

ரத்தன் சிங்கின் மனைவி தான் பத்மினி..பத்மாவதி என்றும் பெயர் கொண்ட
ராணி பத்மினி ஈடு இணையற்ற பேரழகி!...

ஆயிரம் தாமரைகள் கூடி நின்றாலும்
அவளுடைய அழகுக்கு நிகர் அவளே!..

இந்த விஷயத்தை அப்படி இப்படியாகக் கேள்விப்பட்ட கில்ஜி
கிறுகிறுத்துப் போனான்...

மேவார் நாட்டை நோக்கி
அலாவுதீன் கில்ஜி தனது படையை நடத்திய நாள் - 28 ஜனவரி 1303..

மேவார் நாட்டின் சித்தோர்கர் கோட்டை முற்றுகையிடப்பட்டது..

சில நாட்களிலேயே தெரிந்து போனது -
இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்க்கமுடியாதென்று...

நம்பிக்கையான ஒருவனைத் தூதனாக அனுப்பினான்..

நட்பு நாடி வருகின்றேன்..
இந்நாட்டின் மகாராணியை ஒருமுறை பார்க்க வேண்டும்!.. - என்று..

முற்றுகை நீடிப்பதை விரும்பாத மன்னன்
கில்ஜியின் வார்த்தைகளை நம்பி விட்டான்.. இருப்பினும் -

எங்கள் மரபின்படி - அந்நிய ஆடவர் முன்பாக பெண்கள் வரமாட்டார்கள்..
எனவே நிலைக்கண்ணாடி ஒன்றில் ராணியைக் காணலாம்.. - என்று செய்தி அனுப்பினான்..

அதற்கு உடன்பட்ட கில்ஜி இரண்டு வீரர்களுடன் கோட்டைக்குள் நுழைந்தான்..

கில்ஜியை அன்புடன் வரவேற்றான் - மன்னன்.. 

சற்று நேரத்தில் நிலைக் கண்ணாடியில் 
முக மறைப்புடன் தென்பட்டாள் - ராணி பத்மினி...அந்த சில விநாடிகளுக்குள் கில்ஜி மனதில் வேறொன்றைக் கணக்கிட்டான்..

நல்லது நண்பரே.. நான் உங்கள் அரண்மனைக்கு வந்ததைப் போல
தாங்களும் எனது பாசறைக்கு வந்து சிறப்பிக்க வேண்டும்!..

வஞ்சகமறியாத மன்னன் கில்ஜியுடன் அவனது பாசறைக்குச் சென்றான்...

கபடமே உருவான கில்ஜி - மன்னனைச் சிறைப் பிடித்து காவலில் வைத்தான்..
அத்துடன் அரண்மனைக்கும் சேதி ஒன்றினை அனுப்பினான்..

மன்னனை விடுவிக்க வேண்டும் எனில்
ராணி பத்மினி உடனடியாக இங்கே வரவேண்டும்.. 
இல்லையேல் நடப்பதே வேறு!.. - என்று...

அந்த ஓலையைக் கண்டதும் 
அரண்மனையிலிருந்து ஒரு ஓலை கில்ஜிக்குச் சென்றது..

மன்னனைக் காக்கும் பொருட்டு மகாராணியார் 
தனது சேடிப் பெண்கள் புடை சூழ - எழுபது பல்லக்குகளில்
ஆரோகணித்து நாளை காலையில் - அவ்விடம் வருவார்கள்!..
நிபந்தனையின்படி மன்னனை விடுவிக்க வேண்டும்!...

ஓலையினைக் கண்டதும் தேன் குடித்த மாதிரி இருந்தது - கில்ஜிக்கு..

எவ்வித சோதனையும் இன்றி - கோட்டையிலிருந்து வரும்
பல்லக்குகளை உள்ளே அனுமதிக்க ஆணையிட்டான்.. 

மறுநாள் காலையில் - சித்தூர் கோட்டையிலிருந்து புறப்பட்ட
எழுபது பல்லக்குகளும் கில்ஜியின் பாசறையை அடைந்தன..

உற்சாகம் மிகுத்துக் கிடந்த கில்ஜியை அந்த செய்தி ஈட்டியைப் போல தாக்கியது..

எதிர்பார்த்தபடி பல்லக்குகளில் பெண்கள் எவரும் வரவில்லை..
கை தேர்ந்த மாவீரர்கள் பலர் ஆயுதங்களுடன் வந்து 
சிறையில் இருந்த மன்னனை மீட்டுக் கொண்டு சென்று விட்டார்கள்...

தடுக்க முயன்ற கைகலப்பில் இருதரப்பிலும் உயிர்ச் சேதம்..
ஆனாலும் மன்னனை மறுபடியும் பிடிக்க முடியவில்லை...

பைத்தியம் பிடித்த குரங்கைத் தேள் கொட்டியது என்பார்கள்..

அந்த நிலைக்கு ஆளானான் அலாவுதீன் கில்ஜி... 

கொலை வெறியுடன் கொடூரத் தாக்குதலில் இறங்கினான்...

அடுத்த சில நாட்களில் கோட்டையின் நீர்நிலைகள் உட்பட
பல பகுதிகளையும் பாழாக்கினான்...

அறநெறி ஒன்றினையே கைக்கொண்டிருந்த 
பாரதத்தின் ராஜபுத்திரர்கள் - 
மூர்க்கர்களின் கொடூரத்தின் முன்பாகத் தடுமாறினார்கள்..

இனியும் தாக்குப் பிடிக்க முடியாது எனத் தோன்றியது...

வருவதை எதிர்கொள்ளத் துணிந்தனர்...

ஜௌஹர் எனும் தீக்குளிப்பு விழா எடுக்கப்பட்டது..அன்று மாலை கோட்டையிலிருந்த பெண்கள் மங்கல நீராடி -
மஞ்சள் குங்குமம் மாலையுடன் புத்தாடை அணிந்தார்கள்..

மாதா ஸ்ரீ பவானியின் கோயிலில் வழிபாடும் 
மகிழ்ச்சியுமாகக் கழிந்தது - முழு இரவும்..

விடியற்காலை நேரம்...

ஸ்ரீ பவானியின் கோயிலில் வழிபாடு செய்த பின் 
அங்கிருந்த விளக்கிலிருந்து திரி ஒன்று எடுக்கப்பட்டு
அக்னிக் குண்டத்திற்குள் இடப்பட்டது..

கற்பூரம் குங்கிலியம் மாஞ்சருகு முதலான பொருட்களால் நிரப்பட்டிருந்த குண்டம் கனன்று எழுந்தது...

பூரண பொற்கும்பம் தாங்கியவளாக 
மகராணி ஸ்ரீமதி பத்மினி முன் நடந்து குண்டத்தினுள் கலந்தாள்..மகராணி ஸ்ரீமதி பத்மினியைத் தொடர்ந்து ரத்தன் சிங்கின் 
இளைய ராணியான நாகமதி அக்னியில் இறங்கினாள்..

அவர்களைத் தொடர்ந்து -
ஆரவாரத்துடன் தீக்குள் இறங்கியவர்கள் பல்லாயிரம் பேர்...

பொழுது விடிந்து விட்டது...

சிவப்பு ஆடையுடன் வெளிப்பட்ட வீரர்கள்
துளசி தீர்த்தத்தை அருந்தினர்..
அக்னி குண்டத்தில் கரிந்து கிடந்த சாம்பலை 
நெற்றியில் பூசிக் கொண்டனர்...

ஜெய் பவானீ!..

வீர முழக்கத்தினால் கோட்டைச் சுவர்கள் அதிர்ந்தன..
பெரிய வெடி சப்தத்துடன் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டன...

முடிந்த மட்டும் தங்களது வாளால் எதிரிகளைத் துண்டாடினர்..
இயலாத நிலையில் தங்களது கழுத்தையே வாளுக்கு இரையாக்கினர்..

ஒற்றையாகப் போராடிக் கொண்டிருந்த 
மன்னனின் வாளும் இறுதியாக வீழ்ந்தது...

காற்றில் பெரும் புகையும் நிண வாடையும் பரவி நின்றது..

நிலைமையை யூகித்துக் கொண்ட கில்ஜி 
அரண்மனையின் உள்ளே ஓடினான்..

ராணி பத்மினியை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும்!.. - என்று.. 

அவனைத் தொடர்ந்து அவனுடைய முரட்டுக் கும்பலும் ஓடியது..

தீக்கங்குகளுடன் கனன்று கொண்டிருந்தது அக்னிக் குண்டம்..

செந்நிறத் தீச்சுவாலைகள் இன்னும் எரிந்து கொண்டிருந்தன..

பொன் வெள்ளி தாமிரம் முதலானவை உருகிக் கிடக்க - முத்து ரத்தினம் மாணிக்க வைர வைடூரியங்கள் வெடித்துச் சிதறிக் கிடந்தன...

அவற்றையும் மீறியதாக -
இரத்தமும் நிணமும் எலும்பும் சதையும் 
வெந்து குழைந்து வழியெங்கும் வழிந்து கிடந்தன..

தவறி விட்டேன்.. அழகு ஓவியத்தைத் தவற விட்டேன்..
என்ன ஒரு மரபு.. என்ன ஒரு மானம்.. என்ன ஒரு கலாச்சாரம்!..
அடங்க மாட்டேன்.. இதை அழிக்காமல் அடங்க மாட்டேன்!..

ஆக்ரோஷத்துடன் கத்தினான்...

வன்மமும் குரோதமும் பொங்கிப் பீறிட்டெழுந்தது..
தன் கையினால் தன் கையினையே குத்திக் கொண்டான்...

அவனைத் தொடர்ந்து வந்த 
கும்பலும் அவனைப் போலவே கத்தியது..
  ஆனாலும் அந்த எண்ணம் பலித்ததா!?..

அலாவுதீன் கில்ஜியும்
அவனைத் தொடர்ந்த ஆயிரம் ஆயிரமும்
பின்னும் ஆங்கில ஐரோப்பிய வல்லூறுகளும்
பலவகைகளிலும் முயன்று கொண்டு தான் இருக்கின்றன..

பாரதத்தின் கலையையும் கலாச்சாரத்தையும் 
சிதைத்து சீரழித்து விடவேண்டுமென்று!..

அவ்வப்போது ஆங்காங்கே சரிவுகள் ஏற்பட்டு சிதைந்தாலும்
தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் அமீபாவினைப் போல
பாரத மண்ணின் கலையும் கலாச்சாரமும் தங்களைத் தாங்களே
பொலிவுடன் புதுப்பித்துக் கொள்கின்றன...

இந்தப் பதிவின் தகவல்கள் 
விக்கி பீடியாவில் பெறப்பட்டவைஎங்கிருந்தோ ஒற்றை விளக்கின் ஒளி தெரிகின்றது..
நல்ல மனம் செல்வதற்கான வழி புரிகின்றது..

ஓம் சக்தி ஓம்.. 
***  

திங்கள், நவம்பர் 20, 2017

கார்த்திகைத் திங்கள் 1

எல்லா மாதங்களிலும் தான் திங்கட்கிழமைகள்!..

ஆனாலும்
இந்த கார்த்திகையின் திங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு?..

திங்கள் - சந்திரனுக்கு உரிய நாள்...

முப்பத்து முக்கோடி தேவர்களிலும் சந்திரன்
மன்மதனுக்கு அடுத்து குறிப்பிடத்தக்க அழகுடையவன்..

இந்த அழகினால் சில அடாத செயல்களும் நிகழ்ந்திருக்கின்றன...

அவற்றுள் தலையாயது -
தட்சனின் இருபத்தேழு பெண்களுள் ஒருத்தியாகிய
ரோகிணியிடம் மட்டும் அதிகம் அன்பு கொண்டிருந்தது..

அதன் பயனாக சந்திரனுக்கு தட்சனின் சாபம் கிடைத்தது -
அழகெல்லாம் தேய்ந்து அழியக்கடவது!.. - என்று...

சாபத்தினால் பாதிக்கப்பட்ட சந்திரன் -
எங்கெங்கோ ஓடிக் களைத்தான்.. நாளும் நாளும் இளைத்தான்...

கயிலாயம் மட்டுமே அவனுக்குக் கை கொடுத்தது...

எல்லாம் வல்ல எம்பெருமான் -
தேய்பிறையான சந்திர கலையைத் தன் திருமுடியில்
சூடிக் கொண்டு அவனுக்கு வாழ்வளித்தார்...

தட்சனின் சாபம் தகர்ந்திட -
அடுத்தடுத்த நாட்களில் சந்திரன் வளர்பிறையானான்...

வளர்பிறையான சந்திர கலையைத் தனது திருமுடியில்
சூடிக் கொண்டு அம்பிகையும் அவனுக்கு வாழ்வளித்தாள்...

இந்த நன்றியினை மறவாத சந்திரன்
வலம்புரிச் சங்கில் அமுதத்தை நிறைத்து
கார்த்திகை மாதத்தின் திங்களன்று
ஐயனுக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து மகிழ்ந்தான்...

இதனாலேயே -
கார்த்திகையின் திங்கட்கிழமைகள் புனிதமாயின...

திருஆலம்பொழில் திருக்கோயில்
நாமும் நம்மிடம் எத்தனை எத்தனையோ
குறைகளையும் குற்றங்களையும் கொண்டிருக்கின்றோம்..

இப்படியிருந்தும் நல்லபடியாக வாழ்கின்றோம்..

இந்த வாழ்க்கைக்கு நன்றி கூறும் நாளே கார்த்திகை சோம வார வழிபாடு...

கார்த்திகை சோமவார வழிபாடு
எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக நிகழ்வுறும்...

வழிபாடுகளில் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்வதனால்
நமது பாவச் சுமைகளின் அழுத்தம் குறையும்...

மீண்டும் பாவங்களைச் செய்யாதிருக்கும்படியான
பக்குவமும் மன உறுதியும் உண்டாகும்..

இந்த நல்ல நாளில்
வழக்கம் போல சிவாலய தரிசனம்..

திருத்தலம்
திருஆலம்பொழில்

ஸ்ரீ ஆத்மநாதேஸ்வரர்
ஸ்ரீ ஞானாம்பிகை
இறைவன்
ஸ்ரீ ஆத்மநாதேஸ்வரர், ஸ்ரீ வடமூலேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஞானாம்பிகை

தீர்த்தம் - கமல தீர்த்தம்
தலவிருட்சம் - ஆலமரம்

மேற்கு நோக்கிய திருக்கோயில்..
அஷ்ட வசுக்களும் காஸ்யப முனிவரும் வழிபட்ட திருத்தலம்..

காஸ்யப முனிவருக்கு ஆலமரத்தின் கீழ்
சுயம்பு லிங்கமாக தரிசனம் என்பது ஐதீகம்..

திருநாவுக்கரசு ஸ்வாமிகள் தரிசனம் செய்து திருப்பதிகம் அருளியுள்ளார்..


சிவ சந்நிதிக்கு நேரெதிராக குளக்கரையில் விநாயகர் சந்நிதி..
சிவலிங்கத்தைப் பார்த்தவாறு ஸ்ரீ விநாயக மூர்த்தி..

பந்தநல்லூர், தாமரங்கோட்டை - என,
வெகு சில கோயில்களிலேயே இவ்வாறு அமைந்திருக்கும்...

விநாயகர் கோயிலுக்கு பின்னே இருக்கும் தாமரைக் குளத்தில்
இப்போது நீர் நிறைந்திருக்கலாம்.

ஆகஸ்ட் மாதம் நான் சென்றிருந்தபோது வறண்டிருந்தது..

திருக்கோயிலில் சிவ சந்நிதி சற்றே சரிவாக அமைந்துள்ளது..

காரணம் - இங்கே பங்குனி மாதம் 12,13,14 - தேதிகளில்
மாலை வேளையில் சூரிய வழிபாடு நிகழ்கின்றது..

இந்த மூன்று நாட்களும் சூரியனின் கதிர்கள்
சிவ சந்நிதியினுள் பரவி நிற்கின்றன...


கருவறையின் இருபுறமும்
யானை படுத்திருக்க அதன் மத்தகத்தில்
கதையை ஊன்றியவாறு துவார பாலகர்கள்..

சிவசந்நிதிக்கு முன்பாக -
அர்த்த மண்டபத்தில் நால்வர் திருமேனிகள்..


தெற்கு நோக்கி நின்றருளும்
திருக்கோலத்தினளாக ஸ்ரீஞானாம்பிகை...

ஈசனையும் அம்பிகையையும்
முன்மண்டபத்தில் நின்றபடி ஒருசேர தரிசிக்க இயலும்...

திருப்பெயருக்கு ஏற்றவாறு ஞானம் அருளும்
அம்பிகையின் திருவடிகளைப் பணிகின்றோம்...

அம்பிகையின் எதிர்புறமாக நவகிரகங்கள்..

அம்பிகையை வலம் செய்ததும்
தென்புறமாக ஸ்ரீ மகாகணபதி..
வடபுறமாக ஸ்ரீசிவசுப்ரமண்யன் - வள்ளி தெய்வானையுடன்!..

அடுத்து நடராஜ சபை.. சிவகாமி அம்மையுடன் ஆடல் வல்லான்...
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!.. - என, வணங்குகிறோம்..

வடக்கு திருச்சுற்றில் ஸ்ரீ துர்கா தேவி..
மகிஷனின் தலைமீது நிற்கின்றாள்.. எழிலார்ந்த திருக்கோலம்...

அடுத்து சண்டிகேஸ்வர தரிசனம் .. கீழைத் திருச்சுற்று..
திருச்சுற்றின் ஓரத்தில் பலவிதமான மரங்களும் மூலிகைச் செடிகளும்...


தெற்குத் திருச்சுற்றில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சந்நிதி...

ஆலின் கீழ் எழுந்த சிவமூர்த்தி ஆதலால்,
ஆலமர் செல்வன் மேதா தக்ஷிணாமூர்த்தி எனத் திகழ்கின்றார்..

மேலைத் திருச்சுற்றில் காஸ்யப முனிவர் வழிபட்ட சிவலிங்கங்கள்..

நிருதி மூலை மண்டபத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் விசாலாக்ஷி அம்பிகை...காவிரியின் தென்கரையில் திகழும் அழகான திருக்கோயில்..
எவ்வித ஆடம்பர ஆரவாரங்களும் இன்றி அமைதியாக விளங்குகின்றது..

முன்னொருகாலத்தில்
ஊரின் பெயர் தென்பரம்பைக்குடி என்றும்
திருக்கோயிலின் பெயர் திருஆலம்பொழில் - என்றும் வழங்கப்பட்டுள்ளது..

இதனை திருநாவுக்கரசரின் திருப்பதிகம் மூலமாக அறியலாம்...

ஆனால் இன்றைக்கு ஊரும் திருஆலம்பொழில் என்றாகி விட்டது..

தஞ்சை திருவையாறு சாலையில் -
கண்டியூரில் இருந்து மேற்காக கல்லணைக்குச் செல்லும் வழியில் திருப்பூந்துருத்தியை அடுத்து (2 கி.மீ) உள்ளது திருவாலம்பொழில்...
சாலையின் கீழ்புறமாக எழிலாக அமைந்துள்ளது திருக்கோயில்...

கோயிலின் அருகிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையம்..


தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

தஞ்சையிலிருந்து கண்டியூர் வழியாக
திருக்காட்டுப்பள்ளி செல்லும் நகரப் பேருந்துகளும்
தஞ்சை - கல்லணை செல்லும் புறநகர் பேருந்துகளும்
திருக்கோயிலின் அருகில் நின்று செல்கின்றன..

இந்த வழித்தடத்தில் தான் -
வரகூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயிலும் உள்ளது..

இந்த வருடம் வைகாசியில் (ஜூன்/5) திருக்குடமுழுக்கு நிகழ்ந்துள்ளது..

திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, வரகூர்,
நடுக்காவேரி ஸ்ரீ வாத்தலை நாச்சியாள் மற்றும் திருக்காட்டுப்பள்ளி
- என,திருக்கோயில்கள் அருகருகாக விளங்குகின்றன..

தஞ்சை மாநகரிலும் அதனைச் சுற்றியுள்ள
திருக்கோயில்கள் அனைத்தையும் தரிசிக்க ஒரு மாதம் கூடப் போதாது...

ஆலம்பொழில் ஐயனும் அம்பிகையும்
அனைத்துயிர்க்கும் 
மங்கலங்களை அருள்வார்களாக..

வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை
வானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவம் ஆர்த்த
அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும்
புரையார்ந்த கோவணத்துஎம் புனிதன் தன்னைப்
பூந்துருத்தி மேயானைப் புகலூரானைத்
திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய
திருஆலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே!..(6/86)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

சனி, நவம்பர் 18, 2017

ஸ்வாமியே சரணம்

நேற்று கார்த்திகை முதல் நாள்..


சபரிமலை ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியை மனதில் கொண்டு
விரதம் ஏற்கும் அன்பர்கள் மாலையணிந்திருக்கின்றனர்..

எவ்விதமான கோள் சாரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை..
கார்த்திகை முதல் நாள் மட்டும் அப்படி ஒரு சிறப்பினை உடையது...

கார்த்திகை முதல் நாளைத் தவற விட்டால் -
அதன் பிறகு மாலையணிவதற்கு நாள் கணிக்க வேண்டும்...

ஆனால் -
இன்றைய அவசரமான காலகட்டத்தில்
இதையெல்லாம் பின்பற்றுகின்றார்களா!?..

தெரியவில்லை..

மிகக் கடுமையான நடைமுறைகளைக் கொண்ட விரதம்..

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் -
சபரி மலைக்கு மாலையணிபவர்கள் வீட்டை விட்டு வெளியேறி
கோயில் மண்டபங்களில் தங்கி சமைத்து சாப்பிட்டு விட்டு
இருமுடிகட்டி ஸ்வாமி தரிசனம் செய்திருக்கின்றார்கள்...

இன்றைக்கு -
ஒற்றைக் குடித்தனத்திற்குள் விரதமும் விசேஷங்களும் தொடர்கின்றன..

அவரவர் சூழ்நிலை அப்படி!..

இவையெல்லாம் ஐயப்பனின் விருப்பம்...

நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை..

மாலையணிந்ததில் இருந்து இருமுடி கட்டும் வரைக்கும்
அடுத்து வரும் சனிக்கிழமை ஒவ்வொன்றும்
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கியமானவை...

முதன்முறையாக மலைக்குச் செல்லும் பக்தர் நடத்தும்
கன்னி பூஜையில் இருந்து விஸ்தாரமான படி பூஜை வரைக்கும்
சனிக்கிழமைகளில் தான் நடைபெறும்...

ஐயப்ப விரதத்தின் முக்கிய நோக்கம் -
இயன்றவரை பிறருக்கு உதவுவது..
அனைவரிடத்தும் அன்பு கொள்வது!..

குறிப்பாகச் சொன்னால் -
வையகத்தை வாழ்த்துதலும் வளப்படுத்துதலும்!..

இவை இரண்டையும் தலைமேற்கொண்டு விட்டால்
நம் இல்லத்தின் பூஜை மாடத்திலேயே
ஸ்ரீஐயப்ப ஸ்வாமியைத் தரிசனம் செய்யலாம்!..

இந்த அளவில் இன்றைய பதிவில்
ஸ்ரீ ஐயப்ப வழிபாட்டு ஸ்லோகங்கள்..

முதலில் உள்ள ஐந்து கண்ணிகளும் 
ஸ்ரீ சாஸ்தா பஞ்ச ரத்னம் என வழங்குகின்றது..

வேறு சில குறிப்புகளில் இவையெல்லாம் 
ஸ்ரீ சாஸ்தா தசகம் எனப்படுகின்றது..

எவையாகிலும் எல்லாம் ஐயப்பனுக்குரியவை..

ஐயன் அருள் உண்டு 
என்றும் பயமில்லை...


ஓம்
லோக வீரம் மஹா பூஜ்யம்
சர்வ ரக்ஷா கரம் விபும்
பார்வதி ஹ்ருத யானந்தம்
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம்
விஷ்ணு சம்போ ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரசாத நிரதம்
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

மத்த மாதங்க கமனம்
காருண்யா ம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம்
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

அஸ்மத் குலேஸ்வரம் தேவம்
அஸ்மத் ஸத்ரு விநாசனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம்
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

பாண்ட்யேச வம்ச திலகம்
கேரளே கேளி விக்ரஹம்
ஆர்தத் த்ராண பரம் தேவம்
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

பஞ்ச ரத்னாக்ய மேதத்யோ 
நித்யம் சுத்த: படேன்னரஹ
தஸ்ய ப்ரசன்னோ பகவான் 
சாஸ்தா வஸதி மானஸே..


த்ரயம்பக புராதீசம்
கணாதிப ஸமன்விதம்
கஜாரூட மஹம் வந்தே
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

சிவவீர்ய ஸமுத் பவம்
ஸ்ரீநிவாஸ தனூத் பவம்
சிகிவாகனா னுஜம் வந்தே
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

யஸ்ய தந்வந்த்ரிர் மாதா
பிதா தேவோ மஹேஸ்வர:
தம் சாஸ்தா மஹம் வந்தே
சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்..

பூதநாத ஸதாநந்த
ஸர்வபூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நம:

ஆச்யாம கோமள விசால தனும் விசித்ரம்
வாஸோ வசானம் அருணோத் பலதாம ஹஸ்தம்
உத்துங்க ரத்ன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபத்யே..

ஓம் 
ஸ்வாமியே சரணம் 
சரணம் ஐயப்பா!.. 
*** 

வியாழன், நவம்பர் 16, 2017

உன்னுடன் நான்..

பொழுது விடிவதற்கான நேரம் தான்..

மிச்சம் மீதியாக இருந்த சின்னஞ்சிறு குருவிகளும்
காக்கைகளும் சேர்ந்து கொண்டு கதிரவனை வரவேற்றுக் கொண்டிருந்தன..

இந்த வருடம் தேவியரின் தரிசனத்திற்கு தாமதமாயிற்று..

ஆவல் மீதூற விரைந்து நடந்து படித்துறையை அடைந்தபோது -
அங்கே எனக்கு முன்பாக வந்து காத்திருந்தனர் -

காவிரியும் கங்கையும்!..

ஆகா.. என்ன ஒரு அரிய காட்சி!.. பார்க்கப் பார்க்கப் பரவசம்!..

கிழக்கு நோக்கியவளாக கங்கா அமர்ந்திருக்க
அவளுடைய மென்தோளில் சாய்ந்தவளாக - காவேரி!..

கங்கையின் திருவடிகள் நீரில் அளைந்து கொண்டிருக்க-
அவளுடைய திருப்பாதக் கொலுசுகளில் மோதுவதற்கு
நீரலைகள் - ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன...

படிக்கட்டுகளில் தாவிக் குதித்து இறங்கிய நான்
தெய்வமங்கையரின் திருவடிகளைத் தொட்டு சிரசில் வைத்துக் கொண்டேன்..

காவிரியாள்
தாயே சரணம்!.. தாயே சரணம்!..

காவேரி.. இதோ வந்து விட்டான் உன் மகன்!.. - கங்கா திருவாய் மலர்ந்தாள்..

ஏனக்கா.. இவன் உங்களுக்கும் மகன் இல்லையா!.. - காவேரி வினவினாள்..

எனக்கும் மகன் தான்.. ஆனாலும், இந்த ஊர்க்காரர்கள் எல்லாம் உனக்கு மகனும் மகளும் ஆகின்றார்கள்.. அவர்களுக்கெல்லாம் நீ அன்பு மகள் ஆகின்றாய்!.. காதோலை கருகமணியுடன் வளையலும் பூம்பட்டும் புதுத் தாவணியும் பூச்சரமும் மாலைகளும்.. இதெல்லாம் யாருக்குக் கிடைக்கும்!..

இதைக் கேட்டு காவிரி மெல்லச் சிரித்தாள்...

அப்படியும் இருக்கின்றார்கள்... 
அங்கமெல்லாம் நோகும்படிக்கு என்னை அலைக்கழித்து 
விஷக் கழிவுகளைப் பாய்ச்சி சீரழிப்பவர்களும் இருக்கின்றார்கள்...
இதையெல்லாம் என்னவென்று சொல்வது!?..

அதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்... கலங்காதே காவிரி!..

காவிரியைத் தேற்றினாள் - கங்கா...

தாயே.. துலா மாதமாகிய ஐப்பசியின் முப்பது நாளும் 
தாங்கள் இங்கே காவிரியுடன் கலந்திருந்தீர்கள்.. 
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா!.. - என்பதுடன் இதுவும் சிறப்பு...

ஆமாம்.. இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும்
அருள் பொழியும் பொருட்டு நாளை ஒருநாள் கூடுதலாக!..

- கங்கையாள் அன்புடன் மொழிந்தாள்..

ஆம் தாயே!.. எல்லாருக்கும் அருளும் பொருட்டல்லவோ
அம்பிகை மயிலாக உருமாறி இங்கே நடமாடினாள்...
அம்பிகையுடன் எம்பெருமானும் கலந்து மயூர தாண்டவம் நிகழ்த்தினன்
என்றால் காவிரிக் கரையின் பெருமையை சொல்ல வல்லார் யார்!?..

அதனால் தானே - காவிரியின் வண்ண முகம் காண்பதற்கு
வடக்கேயிருந்து ஓடோடி வருகின்றேன்!.. என்ன காவிரி.. வடிவழகி தானே நீ!..

போங்கள் அக்கா!.. நீங்கள் தான் அழகு.. பேரழகு!.. 
உங்களுக்கு இங்கே யார் ஈடு இணை!?..

ஆனாலும், கங்கையினும் புனிதமாய காவிரி!..
- என்று உன்னைத் தானே போற்றுகின்றார்கள்...

தாயே!.. தாங்கள் இருவருமே இவ்வையகத்தின் கண்கள்!...
நீரும் சோறும் அறிவும் ஞானமும் உங்களால் ஆகின்றன..
தாங்களின்றி எங்களுக்கு எதுவும் இல்லை!..

காலங்கள் தோறும் பிறவி எடுத்துக் கிடந்தாலும்
இங்கே - இங்கேயே நதிக்கரையின் ஓரமாக
ஒரு புல்லாக முளைத்துக் கிடப்பதே புண்ணியம்!..

அதைத் தானே ஆன்றோரும் சான்றோரும் வேண்டி நிற்கின்றனர்..
அவ்வண்ணமாகத் தானே எளியவராகிய நாங்களும் வேண்டுகின்றோம்!..

என்னப்பா!.. எல்லாரும் பிறப்பற்ற நிலையை அல்லவா விழைகின்றனர்!..

கங்கையின் திருமுகத்தில் வியப்பு..

தாயே.. அதுவும் பேரின்பம் தான்.. இதுவும் பேரின்பம் தான்!..

பச்சைமா மலைபோல் மேனிபவள வாய்கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!.. 
- என்கிறார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்...

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!..
- என்கிறார் அப்பர் ஸ்வாமிகள்...

அடியார்களும் ஆழ்வார்களும் - 
மாதவனை மகாதேவனைத் துதித்துக் கிடப்பதற்கு 
மீண்டும் பிறவியை வேண்டுகின்றார்கள் எனில் -
அவர்தமக்கு அடியார்களாகிய நாங்களும் 
அவ்வண்ணம் தானே வேண்டி நிற்போம்!..

அப்படிப் பிறக்குங்கால் 
நீர் இன்றிப் பிறப்பேது!..
நீவிர் இன்றிச் சிறப்பேது!..

ஓ!.. தமிழ்.. காவிரித் தமிழ்!.. - கங்கையின் திருமுகத்தில் பூஞ்சிரிப்பு..

ஆம்.. தாயே!..
காவிரியால் வந்ததே சொல்..
காவிரியாள் தந்ததே சொல்!..

கல.. கல.. - எனச் சிரித்தனர் காவிரியும் கங்கையும்..

இந்த மங்கலமும் மாட்சியும் என்றென்றும் நிறைந்திருக்க வேண்டும்..
எல்லாரும் இன்புற்று வாழ்ந்து இவ்வையகத்தைக் காத்திட வேண்டும்..
கங்கையும் காவிரியும் எங்களுக்கு நல்லருள் புரிய வேண்டுகின்றேன்!..

கங்கையும் காவிரியும் அபய வரதம் காட்டி நின்றருளினர்..

கைகளைக் கூப்பியவாறு வலம் செய்து
திருவடிகளில் வீழ்ந்து வணங்கினேன்..

வளமும் நலமும் பெற்று 
நீடூழி வாழ்க.. நீடூழி வாழ்க!..

மலர்களைத் தூவி இவ்வையகத்தை 
வாழ்த்திய வண்ணம்
நீரொடு நீராகக் கலந்தனர்...

கிழக்கே ஆதவன் புன்னகையுடன்
கடைமுழுக்குக் காண்பதற்காக 
எழுந்து கொண்டிருந்தான்.. 
*** 

திருத்தலம்
மயிலாடுதுறை
இறைவன் - மயூரநாதர்
அம்பிகை - அஞ்சொலாள்

தீர்த்தம்
கங்கையிற் புனித காவிரி, ரிஷப தீர்த்தம்
தல விருட்சம் - மாமரம்

காசிக்கு நிகரான திருத்தலங்கள் ஆறனுள் மயிலாடுதுறையும் ஒன்று..

திருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்
திருப்பதிகம் பாடித் துதித்த திருத்தலம்...

ஐப்பசியில் திருவிழா காணும் திருத்தலம் மயிலாடுதுறை..
துலா ஸ்நானம் - என, மாதம் முழுதும் இங்கே கோலாகலங்கள்..
பூர நட்சத்திரத்தை அனுசரித்து திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்தது..

இன்று கடை முழுக்கு...
நாளை - முடவன் முழுக்கு

நேற்று திருத்தேரில் ஈசனும் அம்பிகையும் எழுந்தருளினர்..

இன்று கடைமுக தீர்த்த வாரிக்காக -
ஸ்வாமியும் அம்பிகையும் விடை வாகனத்தில் எழுந்தருள்கின்றனர்..

காவிரியின் அக்கரையில் விளங்கும் ஸ்ரீ பரிமளரங்கன் திருத்தேரில் உற்சவம் காணுகின்றார்..

இன்றைய பதிவில் -
மயிலாடுதுறையில் நடந்து கொண்டிருக்கும்
துலா உற்சவத்தின் திருவிழாக் காட்சிகள்...

படங்களை FB வழியாக வழங்கியவர்கள்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்..
அவர்தமக்கு மனமார்ந்த நன்றிகள்..

 


நிலைமை சொல்லுநெஞ்சே தவம் என்செய்தாய்
கலைகள் ஆயவல்லான் கயிலாய நன்
மலையன் மாமயிலாடு துறையன் நம்
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே!..(5/39)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

செவ்வாய், நவம்பர் 14, 2017

நெல்லையில் திருவிழா

திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி!... 
- என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு..

நெல்லுக்கு வேலியிட்டு காத்தருளிய பரமன் -
மூங்கில் வனத்தில் சுயம்பாக முளைத்தெழுந்தவர்...

மூங்கில் வனநாதர் - என்பது திருப்பெயர் எனினும்
நெல்லையப்பர் என்றது கொஞ்சு தமிழ்..

நெல்லையப்பருடன் கலந்து உறவாடி நிற்பவள் - ஸ்ரீ காந்திமதி அம்பிகை..

மதுரையம்பதியைப் போலவே நெல்லையிலும்
ஸ்ரீ காந்திமதி தனிக் கோயிலில் அருளாட்சி செய்கின்றனள்..

அகத்திய மாமுனிவருக்குத் திருக்கல்யாணத் திருக்காட்சி வழங்கிய திருத்தலங்களுள் நெல்லையும் ஒன்று..

அளவில் பெரியதான திருக்கோயில்..
கற்களெல்லாம் கலைநயம் கொண்டு கதை பேசுகின்றன..

வருடம் முழுதும் விசேஷங்கள் பல நடந்து கொண்டிருக்கின்றன..

நிகழும் ஐப்பசியில் உத்திர நட்சத்திரத்தை அனுசரித்து -
திருக்கல்யாணத் திருவிழா நடைபெறுகின்றது..

03/11 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில்
நாளும் வெவ்வேறு திருக்கோலங்களில் காந்திமதி எழுந்தருளினள்..

திருவிழாக் காட்சிகளை FB ல் வழங்கியோர் -
உழவாரத் திருப்பணி மற்றும் 
நெல்லையப்பர் அடியார் திருக்கூட்டத்தினர்..

அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..

இன்றைய பதிவினில் - 
நெல்லை திருவிழாக் காட்சிகள்..தவக்கோலத்தில் அன்னை
பத்தாம் நாள் தவநிலை கொண்டருளினள்..

தவக்கோலம் எய்திய அன்னை தவம் முடித்தவளாகி
மங்கல நீராட்டு கண்டருளினாள்..
நெல்லை ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள்
நெல்லை ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமான் -
வேணுவன நாதனை மணக்கோலம் கொண்டு
அம்பிகையின் திருக்கரம் பற்றுதற்கு வேண்டினார்..

திருவிழாவின் பதினோராம் நாளாகிய இன்று காலைப் பொழுதில் ஸ்ரீவேணுவனநாதனுக்கும் காந்திமதி அம்பிகைக்கும்
கோலாகலமாக திருக்கல்யாணம் நடைபெற்றது...

திருக்கல்யாண நாயகன்
திருக்கல்யாண நாயகி
மாங்கல்யதாரணம்
மகா ஆரத்தி
பட்டினப்பிரவேசம்
மாங்கல்யதாரணத்திற்குப் பின் அம்பிகையும் ஸ்வாமியும்
பூப்பல்லக்கில் பட்டினபிரவேசம் எழுந்தருளினர்..

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்கின்றது..

அம்மையப்பனின் மணக்கோலம் கண்டு
மங்கலம் பெறுவோமாக!..

மருந்தவை மந்திரம் மறுமைநன் நெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதர துன்றுபைம்பூஞ்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி உறை செல்வர்தாமே!..(3/92) 
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***