நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

மார்கழித் தென்றல் - 11

குறளமுதம்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.. (0200) 
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 11

திவ்ய தேசம் - திருக்குருகூர்
ஆழ்வார் திருநகரி


எம்பெருமான் - ஆதிநாதன்
தாயார் - ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி
உற்சவர் - பொலிந்து நின்ற பிரான்

ஸ்ரீ கோவிந்த விமானம்
நின்ற திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்

நவதிருப்பதிகளுள் - குரு ஸ்தலம்.
வியாழ தோஷங்கள் நீங்கும் திருத்தலம்..



ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்த திருத்தலம்..
சடகோபன் என்பது திருப்பெயர்..



இங்குள்ள புளிய மரப்பொந்தினுள் தான்
சிறுகுழந்தையாகத் தவழ்ந்து
 சின்முத்திரையோடு அமர்ந்து
பதினாறு ஆண்டுகள்
ஞானத்தவம் புரிந்தார்..

வேதம் செய்த தமிழ்மாறன் 
என, போற்றப்படுபவர் - நம்மாழ்வார்..

இவருக்குத் தொண்டு செய்து உய்ந்தவரே
மதுரகவி ஆழ்வார்..

மங்களாசாசனம்
நம்மாழ்வார்
* * *


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்  
***

சிவதரிசனம்
திருத்தலம் - திருநெல்வேலி


இறைவன் - ஸ்ரீ நெல்லையப்பர்
அம்பிகை - ஸ்ரீ காந்திமதி
தீர்த்தம் - தாமிரபரணி
தலவிருட்சம் - மூங்கில்

ஐயன் ஆடிக் களிக்கும்
பஞ்ச சபைகளுள் - தாமிரசபை..

மூங்கில் வனத்துள் முளைத்தெழுந்த சிவலிங்கம்.

உச்சிகால வழிபாட்டினை 
அம்பிகை நிகழ்த்துவதாக ஐதீகம்..

அகத்தியருக்குத் திருமணக்கோலம்
கட்டியருளிய திருத்தலம்..


அறம் காத்த எளியோர் உலர்த்தியிருந்த நெல்லை
மழையினின்று வேலியிட்டுக் காத்தருளியதால்
திருநெல்வேலி..


தமிழகத்தில் ஆடிப்பூரம் மிகச்சிறப்பாக
நிகழும் சிவாலயம்..

நேர்ந்து கொண்டோர் ஒன்று கூடி
அம்பிகையைத் தம் மகளாகப் பாவித்து
வளையல் அணிவித்து
இறும்பூது எய்துகின்றனர்..

அன்பு கொண்ட அனைவருக்கும் அம்பிகையே அன்னை..
பின்னும் அவளே - அன்பு மகள்!..  
* * *

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருக்கடைக்காப்பு


ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளஅரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையர்
ஆனின் நல் ஐந்துகந்து ஆடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல்வேலி உறைசெல்வர் தாமே!.. (3/92)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்
* * *

திருஅம்மானை
திருப்பாடல்கள் - 01 - 02

செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்குமலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்!..

பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலுங் காண்டற்கு அரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * *

6 கருத்துகள்:

  1. ஆழ்வார்த்திருநகரி சென்றதில்லை. செல்வேன். நெல்லையப்பர் கோயில் சென்றுள்ளேன். திருப்பாவை, திருவெம்பாவையை ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. மார்கழித் தென்றலின் 11 ஆம் நாள் குறளமுதம் அறிந்தேன் ஜி தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. ஒவ்வொரு மாதமும் சிறப்பு பெறும் தலம், அருமை தெரியாத பல தகவல்கள் தங்கள் பதிவுகள் மூலம் தெரிந்துக்கொள்கிறேன்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..