நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 27, 2015

சித்திரைத் திருவிழா - 3

மதுரையம்பதியில் நிகழ்வுறும் சித்திரைத் திருவிழாவின் -
ஐந்தாம் திருநாள் மற்றும் ஆறாம் திருநாளின் படங்களை - இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..


மாமதுரைத் திருக்கோயிலின் சிறப்புகளுள் சில :-

கடம்ப வனம் என்று புகழப்படும் - இத்திருத்தலத்தின் தல விருட்சம் கடம்ப மரம்.

ஆதியான கடம்ப மரம் - சிவமூலஸ்தானத்தின் திருச்சுற்றில் வடபுறமாக வெள்ளிக் கவசத்துடன் விளங்குகின்றது.


திருக்கோயிலின் தீர்த்தங்களுள் முதலானது - பொற்றாமரைத் தீர்த்தம்.

பொற்றாமரைக் குளம் என மக்களால் புகழப்படுவது.

தேவேந்திரனின் வழிபாட்டிற்கென தங்கத் தாமரைகள் - இத்தடாகத்தில் மலர்ந்ததாக ஐதீகம்.


கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்துருகி பத்தி
பண்ணியது உன்னிரு பதாம்புயத்தில் பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் எது என்அம்மே புவி ஏழையும் பூத்தவளே!.. (12)
-: அபிராமி அந்தாதி :-

திருக்குறள் அரங்கேற்றமாகியதும் அதனை ஏற்றுக் கொள்வதற்காக பொற்பலகை தோன்றியது - இக்குளத்தில் தான்!..

இக்குளக்கரையில் தவமிருந்த நாரை - சிவதரிசனத்தின் போது - இக்குளத்தில் இனிமேல் எந்த உயிரினங்களும் வசிக்கக் கூடாது!.. - என வேண்டிக் கொண்டது.

நாரையின் வேண்டுகோளுக்கு இணங்கிய ஈசன் - இக்குளத்தில் இருந்த அனைத்து உயிர்களுக்கும் நற்கதியளித்தனன்.

அதன் பின், பொற்றாமரைக் குளத்தில் மீன் தவளை - முதலான எந்த உயிரினங்களும் வசிப்பதில்லை.

பற்பல ஆண்டுகளுக்கு முன்பு வரை - திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இத்திருக்குளத்தில் நீராடியதாக குறிப்புகள் உள்ளன.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் - நிறைந்த நீருடன் - இத் திருக்குளத்தைத் தரிசித்துள்ளேன்.

நீரை அள்ளித் தலையில் தெளித்துக் கொண்டது இன்னும் பசுமையாக உள்ளது. 


இன்றைய பதிவின் படங்களை வழங்கியோர் :- 
திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின், திரு. அருண்., 
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
* * *

ஐந்தாம் திருநாள் (25/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..


காலை - தங்கச் சப்பரம்.

-: இரவு :-
தங்கக் குதிரை வாகனம்
ஸ்ரீசொக்கநாதப் பெருமான் சோமாஸ்கந்த திருக்கோலத்திலும் -
மரகதவல்லி மீனாட்சி ஏகாந்த நாயகியாகவும்
தனித் தனியே குதிரை வாகனங்களில் எழுந்தருளினர்.






ஆறாம் திருநாள் (26/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

காலை - தங்கச் சப்பரம்.

-: இரவு :-
விடை வாகன திருக்காட்சி 
ஸ்ரீ சுந்தரேசப் பெருமான் தங்க ரிஷப வாகனத்திலும் -
வேல்நெடுங்கண்ணி மீனாட்சி வெள்ளி ரிஷப வாகனத்திலும்
திருவீதி எழுந்தருளினர்.









மன்னவனைக் காண்பதற்கு மழையும் வந்தது
நந்தி வாகனத்தில் அம்மையும் அப்பனும் 
ஆரோகணித்து வரும் திருக்கோலம் ஆருயிர்களுக்கெல்லாம் 
அருள் தரும் அனுக்கிரகத் திருக்கோலம் என்பர் - ஆன்றோர்.
* * *







நிலநடுக்கத்தால் நேபாளம் நிலைகுலைந்து நிற்கின்றது..
அதிர்வுகளால் பாரதமும் பரிதவிக்கின்றது.

சினம் தணிய வேண்டும். 
சிறியோர்களாகிய எம்மைக் காத்தருள வேண்டும்.

நிலமகள் ஸ்வீகரித்துக் கொண்ட அனைத்து உயிர்களுக்கும்
நற்கதி அருளவேண்டும்!..

இடுக்கண்பட்டிருப்போர் அனைவரையும் இருகண் கொண்டு நோக்கி
ஆறுதலும் தேறுதலும் அளித்து அருள் பொழிய வேண்டும்.

இடர் தரு தொல்லை இனிமேல் இல்லை என்று
இன்முகம் காட்டி அரவணைக்க வேண்டும்.
* * *


அம்மையே அப்பா ஒப்பிலாமணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் 
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
எங்கெழுந்து அருளுவது இனியே!..
-: மாணிக்க வாசகர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

13 கருத்துகள்:

  1. மிகச்சிறப்பான அழகான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. நிலநடுக்கம் போன்ற பேரழிவைத்தரும் நிகழ்வுகள் இயற்கை தன்னை சமன் செய்துகொள்ள நடத்தும் ஒரு வழியோ என்று தோன்றுகிறது வழக்கம் போல் படங்களுடன் பதிவு அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      இனியாவது இயற்கையை சுற்றுச்சூழலை முடிந்த வரை காக்க வேண்டும்..ஊழிக்கூத்து நிச்சயம். அதற்கு இதெல்லாம் முன்னோட்டங்கள்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

  3. இறைவா!
    இயற்கையிடம்
    இயம்பு!
    இனியாவதுஇயற்கை சீற்றம்
    சினம் தணிக என்று!
    இன்பமும், துன்பமும் நிறந்ததுவே
    வாழ்வியல்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இயற்கையின் சினம் தணியட்டும்..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  4. வழக்கமான தங்களின் வர்ணனையுடன் புகைப்படங்களும் அழகு
    இயற்க்கையை காக்க இறைவனிடம் வேண்டுவோம் நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      இயற்கை சினம் தணிந்து மக்களைக் காக்கட்டும்..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  5. இயற்கை காப்போம்
    படங்களும் செய்திகளும் அருமை ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. இரண்டாம் படம் ரொம்பவே சிறப்பு.....

    இயற்கையின் சீற்றம் - நில நடுக்கம்.... எனது இரங்கல்களும்...

    பதிலளிநீக்கு
  7. படங்கள் அருமை ஐயா...

    வேதனை தரும் நிகழ்வு...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..