நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 11, 2014

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள்!..


தாயகத்தின் விடுதலையில் வேட்கை கொண்டு 
தமிழைத் தன் கைக் கொண்ட தலைமகன்!..

தமிழ்நிலம் பெற்றெடுத்த புதல்வருக்குள்
தமிழ் கொண்டு பகை கெடுத்த வீரமகன்!..

தமிழ் வாழ்க - நிலம் வாழ்க - குடி வாழ்க என்று 
தமிழுக்கே தனைக் கொடுத்த தங்கமகன்!..

தமிழுக்கு இதென்றும் தமிழர்க்கு இதென்றும்
செந்தமிழால் குறியிட்ட அன்புமகன்!..

அன்னவனின் பேர்பாடி சீர்பாடி புகழ்பாடி
அடிமலர்த்தாள் போற்றுகின்றேன் - வாழிஎன்று!.. 

தமிழ் கொண்டு தமிழகத்தை அலங்கரித்த மகாகவிக்கு 
இன்றைய பதிவு சமர்ப்பணம்!..


செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே!..

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு!..

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வைகை பொருனைநதி - என
மேவி யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு!..


முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு - செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு!..

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு!..

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு!..


வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு!..

சிங்களம் புட்பகம் சாவகம் - ஆதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு!..  


நாடு வாழ வேண்டும்., மக்கள் வாழ வேண்டும்., 
நலம்மிகும் நல்லோர் துணைக்கு வரவேண்டும்!..
நலம்நாடி வரும் நல்லோர் தோளுக்கும் 
நாயகியாம் பராசக்தி அருளல் வேண்டும்!..

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் - இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ

வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்
தஞ்சமென் றே உரைப் பீர்அவள் பேர் - சக்தி
ஓம்சக்தி.. ஓம்சக்தி.. ஓம்!..

நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்.,
அல்லது நீங்கும் என் றேயுலகேழும்
அறைந்திடு வாய் முரசே!

சொல்லத் தகுந்த பொருளன்று காண் - இங்கு
சொல்லு மவர்தமை யே
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி.. ஓம்சக்தி.. ஓம்!..


நம்புவ தேவழி என்ற மறையதன்னை
நாமின்று நம்பிவிட் டோம்
கும்பிட்டெந்நேரமும் சக்தி என் றாலுனைக்
கும்பிடு வேன் மனமே!..

அம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சம் இல்லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி.. ஓம்சக்தி.. ஓம்!..

பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு
போற்றி உனக்கிசைத் தோம்.,
அன்னை பராசக்தி என்றுரைத் தோம் - தளை
அத்தனை யுங்களைந் தோம்.,

சொன்ன படிக்கு நடந்திடுவாய் - மன
மே தொழில் வேறில்லை காண்.,
இன்னும தேயுரைப் போம்சக்தி ஓம் சக்தி
ஓம்சக்தி.. ஓம்சக்தி.. ஓம்!..

வாணியைச் சரண் புகுந்தேன்
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!..
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்.,

எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல்!.. சக்தி
வேல்!.. சக்தி வேல்!.. சக்தி வேல்!..

சக்திவேல்.. சக்திவேல்.. சக்திவேல்..
ஓம் சக்தி!.. ஓம் சக்தி!.. ஓம் சக்தி!.. 
ஓம்!.
* * *

18 கருத்துகள்:

  1. பாரதியாரின் பாடல்களால் அழகிய தொகுப்பு மூலம் அவரை நினைவுகூர்ந்தது மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் மகாகவியை நினைவு கூர்ந்தமைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பாரதி போற்றுவோம்
    பாரதி போற்றுவோம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      போற்ற வேண்டிய புனிதன் - பாரதி!..
      தங்கள் அன்பின் வருகைக்கும் மகாகவியை நினைவு கூர்ந்தமைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பாரதி நினைவுப் பதிவு மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும்
      பெண்மை வெல்க என்று கூத்திட்ட - மகாகவியை நினைவு கூர்ந்தமைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பாரதியைப் பற்றியத் தொகுப்பு மிக அருமை! நினைவு கூர்ந்ததற்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் - காக்கை குருவி எங்கள் ஜாதி - என்று நேயம் கொண்டாடிய மகாகவியை நினைவு கூர்ந்தமைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பாரதியின் பிறந்த நாள் அன்று அவனை நினைத்தல் நன்று, எனக்கென்னவோ பாரதியால் சொல்லப்பட்டு நாம் அறிந்ததைவிட சொல்லாமல் விட்டதை உணர முற்படுவதே இன்னும் நன்று என்று தோன்றுகிறது. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா.,
      தங்கள் அன்பின் வருகைக்கும் - ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆர்ப்பரித்த - மகாகவியை நினைவு கூர்ந்தமைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நாளை மக்களுக்கு துளியளவும் பிரயோஜனம் இல்லாத ஒரு தனிமனிதனுக்கு பிறந்தநாள் என்று தொலைக்காட்சிகள் கோலாகலமாய் கொண்டாடிக்கொண்டு இருக்கும் சூழலில் நம்மைப்போன்றவர்கள்தான் பாரதியை நினைவு வைத்து கொண்டாடுகிறோம் நாட்டில் மழை பெய்வதற்க்கு காரணம் தங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் வாழ்வதே ,,,, வேறு என்ன சொல்லமுடியும், இன்று காலை எனது நண்பர் சோக்லேட் கொடுத்தார் நான் விளையாட்டாக சொன்னேன் பாரதியார் பிறந்தநாளுக்கு ஸ்வீட் கொடுக்கிறீர்களே... என அவர் சொன்னார் எனது மகளின் பிறந்தநாள் அதற்க்குத்தான் என்றார் நான் சொன்ன பிறகுதான் அவருக்குத்தெரியும் அவருக்கு மேலும் சந்தோஷம் இனி நான் பெருமையாக சொல்லிக்கொள்வேன் பாரதியின் பிறந்தநாள் அன்று எனது மகள் பிறந்தாள் என்று......வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் அன்பின் வருகைக்கும் - அச்சமில்லை.. அச்சமில்லை - என்று முழங்கிய மகாகவியை நினைவு கூர்ந்தமைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      மகாகவியின் பிறந்த நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் அன்புச் செல்வத்திற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களைக் கூறுங்கள்..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் - பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்!.. - என்று முழக்கமிட்ட மகாகவியை நினைவு கூர்ந்தமைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பாரதியின் பிறந்த நாள் பதிவு நன்று ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் - சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!.. என்று பெருமை கொண்ட மகாகவியை நினைவு கூர்ந்தமைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. கவிதைப் பதிவிலும் நீங்கள் பரிணமிப்பதை பாரதியார் பதிவு நிரூபிக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் - விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டிய படிசெல்லும் உடல் கேட்ட - மகாகவியை நினைவு கூர்ந்தமைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..