நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 07, 2013

ஸ்ரீ அபிராமவல்லி

இந்திரலோகம் முழுதும் இதே பேச்சாக இருந்தது!..


இந்திரன் ஏதும் புரியாதவனாக  - பெருங்குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான்.

யம தர்மன் நல்லவனா!... கெட்டவனா?...

''..யமதர்மனுக்கே இந்தக் கதி ஆனதென்றால் - நாளை நமக்கு என்ன கதி நேருமோ?..''

நவக்கிரஹ நாயகர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டது!..

''..அமிர்தம் அருந்தியும் பலன் இன்றிப் போய் விடுமோ!.. என்னவோ யமனுக்கு நல்ல நேரம்!. அதிர்ஷ்டத்தால் மீண்டும் பிழைத்துக் கொண்டான்!. நமக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்?..''

''..ஜனங்களை என்னென்ன பாடுபடுத்தி வைக்கிறோம்!. ஜனங்களை மட்டுமா!... ஆடு, மாடு, கோழி.. அட!... செடி கொடிகளைக் கூட நாம் விட்டுவைப்பது இல்லையே!.. அது அந்தந்த ஆன்மாக்களின் கர்ம வினை என்றாலும்  - அவர்கள் படும்பாடு நமக்கே கண்களில் நீர் வழிகின்றது!..''

''.. ஐயா!. சனைச்சரரே!. நீர் எதற்கும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளும்!.''

''.. ராகு!.கேது!. என் வழி தனிவழி...ன்னு தலைகீழா சுற்றி வருகின்ற சாயா கிரக மூர்த்திகளே!. சங்கடத்தை வரவழைத்துக் கொள்ளாதீர்கள்!..''

ஆளாளுக்கு முடிவெடுத்துக் கொண்டிருந்தார்கள்... தேவேந்திரன் பேசத் தொடங்கிய போது - 


உயிர் பிழைத்தெழுந்த யமதர்மராஜன் தேவசபையில் நுழைய - அனைவரும் ஓடிச் சென்று வரவேற்று நலம் விசாரித்தனர்.

யம தர்மன் சொன்னான்.

''.. உலகத்து உயிர்களுக்கெல்லாம் முடிவு என் கையில் என்று இருந்தேன்!... ஆனால் - என் உயிருக்கு முடிவு ஈசனின் காலில் இருந்ததை இன்று தான் தெரிந்து கொண்டேன். காலனுக்கும் காலன்!... காலகாலன்!... ஆ!... காலகாலனுக்கு அருகில் - கலாவல்லி - சகலகலா மயில் - அபிராமி அம்மா மட்டும் ஐயனைப் பார்த்து ஒரு பூஞ்சிரிப்பை பூக்கவில்லை என்றால்  - நீங்கள் எல்லாரும் எனக்கு பூ வைத்திருப்பீர்கள்!.. ஏதோ!.. என் மனைவி ஐயை செய்த தவப்பயன் - நான் பிழைத்து வந்தேன்.. ஆகையால் நண்பர்களே!.. இனி யாரும் திருக்கடவூர் தலத்தினைத் தரிசிக்கும் அன்பர்களின் பக்கம் போய் விடாதீர்கள்!..''

அரண்டு போயிருந்த அனைவரும் - யமதர்மன் கூறியதை ஒத்துக் கொண்டு - திருக்கடவூர் பக்கமே செல்வதில்லை என - ஏகமனதாக முடிவெடுத்தார்கள்!..

அதே சமயம்  - தலைமைக் கணக்கர் - சித்ரகுப்தன் அதிர்ந்தார்.

''..பிரபு!.. திடீரென சில ஏடுகளில் இருந்த கணக்குகளும் குறிப்புகளும் அவைகளாகவே அழிந்து போய் விட்டன!.. இதோ பாருங்கள்... வெளுத்துப் போன ஏடுகளை!..'' - ஓலைச்சுவடிகளை விரித்துக் காட்டினார்.

''.. என்ன சொல்கின்றீர்!..'' - தேவேந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை!..


சனைச்சரர் கூறினார் - ''.. ஆம்!.. தேவேந்திரா!.. அந்தக் குறிப்புகள் அமிர்த கடேஸ்வரரையும் அபிராமவல்லி அம்மனையும் தரிசித்தவர்களுடையது!..''

''.. அதற்குள் விஷயம் பூவுலகிற்கு பரவி விட்டதா?.. அப்படியானால் நமக்கு இனி வேலை குறையும் என்கின்றீர்!..''

''.. எப்படியோ!.. நரகலோகத்தில் கேட்கும் ஓலம் குறைந்தால் சரி!..'' - யமனின் நிம்மதிப் பெருமூச்சு காற்றில் கலந்தது.


அன்றைக்கு தேவர்கள் எடுத்த முடிவின்படி -  திருக்கடவூர் திருத்தலத்தில் நவகிரஹங்கள் பீட ஸ்தாபனம் கொள்ளவில்லை!..

''கொடுப்பதூம் அழுக்கறுப்பான் சுற்றம் உண்பதும்
உடுப்பது இன்றிக் கெடும்''  -

என்ற திருவாக்கின்படி, அம்பிகை - தன் கடைக்கண்ணால் கொடுக்கும் கொடையினை - வினைப்பயனைக் காரணம் காட்டித் தடுக்க முயன்றால், ''என்ன நேருமோ!.. ஏது நேருமோ!..'' என அஞ்சிய  - கிரஹ மூர்த்திகள்  -  திருக்கடவூர் எல்லையை விட்டே நீங்கி விட்டார்கள்.

அபிராமவல்லி - தன் வளைக்கரங்களை அன்புடன் அசைத்து, அன்பர்களைத்  தன்னிடம் அழைத்துக் கொள்வதாக ஐதீகம். அவள் திருக்கரங்களில் திகழும் வளையல்கள் ''..கல கல!..'' என்று ஒலிக்கும் போதெல்லாம் யமதர்மனுக்கு தூக்கம் போய் விடுகின்றது!..

கோல மயிலாய் இமயாசலத்தில் இருந்த அவள் -  கடம்பவனத்தில் குயிலாகி - தன் அன்பர்களின் குறைகள் எல்லாம் தீரும் பொருட்டு - கூவுகின்றாளாம்!...

எப்பேர்ப்பட்ட பேறு!... யாருக்குக் கிடைக்கும் இந்த மாதிரி!...

இவையெல்லாம் ஏதோ பொழுது போக்கிற்காக எழுதப்படும் விஷயங்களே அல்ல!... சத்தியமானவை!.. நித்தியமானவை!..

சாட்சி வேண்டுமா!...

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் (1799- 1832) - அவரே சாட்சி!..

''..கிடைத்ததடா யோகம்!..'' என்று - 

தை அமாவாசை - அன்று சுப்ரமண்ய குருக்களைத் தேடிவந்த யமதர்மன் - அபிராமவல்லி நிகழ்த்திய அற்புதத்தினால் - தலைதெறிக்க ஓடியதற்கு  அபிராமி அந்தாதி  -  மற்றொரு சாட்சி!..

ஈசன் -  பெரு வீரச்செயல்கள்  நிகழ்த்திய எட்டு திருத்தலங்களும் சைவத் திருமரபின்படி வீரட்டானத் தலங்கள் என்று புகழப்படுகின்றன. தேவாரத் திருமுறைகளின் ஊடாக இந்த வீரச்செயல்கள் பலவாறு போற்றப்படுகின்றன.

எட்டு வீரட்டானங்களையும் ஒரே திருப்பாடலில் (6/71/2) - அப்பர் பெருமான் அருளிச் செய்துள்ளார். அவையாவன -

திருக்கண்டியூர் - பிரமன் சிரத்தை அரிந்தது
திருக்கடவூர் - காலனை உதைத்தது
திருஅதிகை - திரிபுரத்தை எரித்தது
திருவழுவூர் - யானையை உரித்தது
திருப்பறியலூர் - தக்கன் வேள்வியைத் தகர்த்தது
திருக்கோவலூர் - அந்தகாசுரனை அழித்தது
திருக்குறுக்கை - காமனை எரித்தது
திருவிற்குடி - சலந்தராசுரனை அழித்தது.

இவற்றுள் திருக்கடவூரில் மட்டுமே  - மனுக்குலத்திற்காக காலனை உதைத்த பெருஞ்செயல் நிகழ்த்தப்பட்டது. 

ஏனைய ஏழும் தேவ காரியங்களை முன்னிட்டு நிகழ்ந்தவை.

வீரட்டானத் திருத்தலங்களின் திருப்பெயர்களைச் சொல்லுபவர்களை,

திருக்கடவூர் என்று நாவில் நவின்று உரைப்பவர்களை  - ''சிவபெருமானுக்கு வேண்டியவர்கள்!..''- என்று யமனும் அவன் தூதர்களும் நெருங்காமல் விலகிச் சென்று விடுவர் - என்பது அப்பர் பெருமானின் திருவாக்கு!..


அதனால்தானே - பின்னாளில் அபிராமி பட்டரும் தமது அந்தாதியில் -

ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்  கைப்
பாசத்தில் அல்லல் பட இருந்தேனை நின்பாதம் எனும்
வாசக்கமலம் தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என்சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே!..(32)
 
என்று அம்பிகை நம்மை ஆண்டு கொண்டு நம்முயிர்க்கு அடைக்கலம் அருளும் விதம் குறித்து தெளிவு படுத்துகின்றார்.

மரபு மாறாமல் - சைவத்தில் அருளாளர்களுக்கு  அருளப்பெறும் திருவடி தீட்சையை - அம்பாள் அவளாகவே வந்து தன் தலையில் திருவடிகளைச் சூட்டி, தம்மையும்  நேசத்துடன் ஆண்டு கொண்டமையை விவரிக்கும் போது நமக்கும் ஒரு தைரியம் பிறக்கின்றது!...

அத்தகைய தைரியம் கிடைக்கப் பெற்றதால் தானே -  மகாகவி பாரதியாரும்

''..காலா!.. உன்னை சிறு புல்லென மதிக்கின்றேன்!..''

- என்று வீறு கொண்டு எழுந்தார்!...


என் அன்னையே!.. அபிராமவல்லி!...

ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு  - அந்தகன்பால்
மீளுகைக்கு உன்றன் விழியின் கடை உண்டு!.. (39)

அந்தகனிடமிருந்து, எனை மீட்கும் உன்கடைவிழிகள் - அத்தோடு நின்றனவா!..

தனந்தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாந்தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!.. (69)

அள்ள அள்ளக் குறையாத தனம் எனும் குணத்தைத் தந்தன!.. அந்தக் குணத்திற்கு அடிப்படையான ஞானம் எனும் கல்வியைத் தந்தன!.. உடல் தளர்ந்தாலும் தளராத மனதைத் தந்தன!.. நேர் நின்று எனைக் காண்பவர் என்னை மதித்து - நலமா!.. என விரும்பிக் கேட்கும்படியான  தோற்றப் பொலிவினைத் தந்தன!.. வாழ்விலும் - இந்த வலைத்தளத்திலும் வஞ்சம் இல்லாத நண்பர்களைத் தந்தன!.. உலகில் உள்ள நல்லன எல்லாம் - கசப்பான மருந்து நல்லது என்றால் அதையும் சேர்த்து - தந்தன!.. இதற்கு மேல் எதுவும் உண்டென்றால் - அதையும் தருவன!...

உனக்கு - என்ன கைமாறு செய்வேன்?.. என் தாயே!..

என்னைப் பெற்றவளே!.. 
பெயர் சூட்டி அழைத்து மகிழ்ந்தவளே!.. 
பெருமையுடன் அணைத்து உச்சி முகர்ந்தவளே!..
உயிருக்குள் உதித்த உயிரென்று உகந்தவளே!..
மீண்டும் உன் மடி தேடி,  மழலையாய்த் தவழும் 
நாள் வரை - நான் வணங்கத் தகுந்தவளே!.. 

அந்த வரம்  மட்டும் தந்தருள்வாய் நீயே!..


அமிர்தகடேஸ்வரரையும் அபிராமவல்லியையும் 
தரிசிக்கும் முன் ஆனந்தம் வெள்ளமாகப் பெருக்கெடுக்கின்றது!..

அந்த நினைவின் ஊடாக நின்று வரும் நாட்களில்
அம்மையப்பனைக் கைகூப்பித் தொழுவோம்!..

விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி
பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே!...

2 கருத்துகள்:

  1. அருமை ஐயா... உங்களின் நட்பு பெற நாங்கள் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்... தெய்வீக பகிர்வுகளை அழகாக அருமையாக விளக்கத்துடன் பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கு மிகவும் சந்தோசம்... பல அரிய தகவல்களையும் (கோவிலைப் பற்றியது) அறிய முடிகிறது... நன்றிகள் பல...

    தொடர வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் மேலாக கருத்துரைக்கு மிக்க நன்றி!.. என்னைக் கருவாய் தந்தவளையும் உருவாய் தந்தவளையும் மனதில் கொண்டு எழுதினேன்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..