நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 19, 2013

ஆடி வெள்ளி - 01

தெய்வீக மணம் கமழும் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை!..

ஊர்கள் தோறும் உற்சவங்கள்!...  வீதிகள் தோறும் தோரணங்கள்!..

வீடுகள் தோறும் மங்கலங்கள்!.. விழிகள் தோறும் புன்னகைகள்!..

மாவிலையும் வேப்பிலையும் தோரணங்களாக
ஆடிக் கொண்டிருக்கின்றன!..

அவை - அன்னை பராசக்தியின் பெரும்புகழைப்
பாடிக் கொண்டிருக்கின்றன!..


திருக்கோயில்களில்  - குறிப்பாக அம்பிகை வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலங்களில் - சிறப்பு மிக்க பூஜைகள், ஹோமங்கள், பால்குட உற்சவங்கள், பூச்சொரிதல், சந்தனக்காப்பு - என விமரிசையாக நடைபெறுகின்றன!..

மங்கலம் அருளும் மாரியம்மன் திருக்கோயில்களில் - பலரும் நேர்த்திக் கடனாக -  மனை விளங்க வேண்டும் என மாவிளக்கேற்றி,  மனமும் வயிறும் குளிர கூழ் வார்த்து - வணங்கி நிற்கும் மாதம் ஆடி மாதம்!. 

இறையன்பர்  இல்லங்களில் தெய்வீக மணம் கமழும் மாதம் ஆடி மாதம்!.. 

ஆஷாட நவராத்திரி வைபவத்தினை அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமை!.

இந்த நாளில் - ஸ்ரீ வராஹி அன்னையை வணங்கி வழிபடுவோம்!.. 

ஸ்ரீ வராஹிக்கு சதுரங்க சேனாநாயிகா எனும் திருப்பெயர் உண்டு.  

ஸ்ரீ லலிதாம்பிகையின்  நால்வகைப் படைகளுக்கு இவளே தலைவி. 

மிகச் சிறந்த வரப்ரசாதி!.. நம் மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை நிறைவேற்றித் தருவதில் இவளுக்கு நிகர் இவளே!.. 


மாமன்னன் ராஜராஜசோழனின் இஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹி என்று அறிய முடிகின்றது. அன்று ராஜராஜசோழ மாமன்னன் ஸ்ரீவராஹியின் துணை கொண்டே அரும் பெரும் வெற்றிகளை எளிதாக சாதிக்க முடிந்தது.  

இன்றும் - தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில்  கைகூப்பி வணங்கும் பல்லாயிரம் பக்தருக்கும் உற்றதுணை என வருபவள் ஸ்ரீ வராஹியே!.. 

மிகுந்த இனிப்புடன் கூடிய பொங்கல், கேசரி, பாயசம், ஜிலேபி போன்ற நிவேத்யங்கள் அம்பிகைக்கு மிகவும் உகந்தவை.  

மருக்கொழுந்து, வில்வம், கிருஷ்ணதுளசி அல்லது மல்லிகை கொண்டு அர்ச்சிக்க - அல்லல்கள் அடியோடு அழிவதை உணரலாம். தீராத பிரச்னைகள் தீர்வதற்கு கருநீலம் அல்லது கரும்பச்சை வண்ணத்தில் புடவை சாத்தி நேர்ந்து கொள்ள அன்னையின் அருள் பரிபூரணமாகக்  கிட்டும். 

திருக்கரங்களில் ஏர்கலப்பையும் உலக்கையும் தங்கி விளங்குவதால் -  ஸ்ரீவராஹி அம்மனை வணங்குபவர் வீட்டில் உணவுக்குப் பஞ்சமே வராது!. தவிரவும் - வீட்டில் நிலவும் கடன், நோய் போன்ற பிரச்னைகள் தொலைந்து போகும்!. வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் ஆரோக்கியமும் ஆயுளும் பொங்கிப் பெருகும்!..


ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!.. 
                                                                           - திருமந்திரம் 4/5/28. 

- என,  ஸ்ரீ வராஹியின் பராக்கிரமத்தினை - திருமூலர் புகழ்கின்றார்.

திரிபுரசுந்தரியானவள் - இழிகுணத்தினை உடைய ஈனர்களின் தேகத்தினை இடித்து நசுக்கி ஒழிக்கும் (முசலம்) உலக்கை மற்றும் ஏழு படைக்கலன்களை ஏந்தி, புன்னகை தவழும்  - வராக முகத்தினளாக - தங்கள் துன்பங்கள் தீர வேண்டும் என - தன்னைத் தியானிக்கும் அன்பர்களின் உள்ளங்களில் என்றும் ஓங்கி விளங்குகின்றாள் - என்பது திருமூலரின் திருவாக்கு!..

(நன்றி - பன்னிரு திருமுறை தொகுப்பு - தருமபுர ஆதீன பதிப்பு)

எல்லாம் வல்ல சிவப்பரம்பொருள் - போகம், வேகம், யோகம் - என மூன்று திருக்கோலங்கொள்ளும் காலத்தில் பராசக்தியும் அவ்வாறே நிற்பாள் என்பது ஆன்றோர் தம் திருக்குறிப்பு.

அதிலும் சக்தியின் வேக வடிவங்களுள் மிகக் கடுமையானவளாகக் கருதப் படுபவள் ஸ்ரீ வராஹி!..

எனவே - நமது நேர்மையான கோரிக்கைகளுக்கு - ஸ்ரீ வராஹி நிச்சயம் அருள் புரிவாள் என்பது தெளிவு!..


அபிராமபட்டர் அபிராமி அந்தாதியிலும், திருப்பதிகத்திலும் பல இடங்களில் ஸ்ரீவராஹியின் திருப்பெயரினைப்  புகழ்கின்றார்.

''..மருந்தினும் இனிய சொற்பைங்கிளி வராஹி!.''- என்பது அவற்றுள் ஒன்று!

இங்கே, மருந்து எனக் குறிப்பிடப்படுவது - அமிர்தம்!.

அமிர்தத்தினை விட இனிய சொற்களைப் பேசுபவளாம் அன்னை!..

அத்தகைய அன்னையின் திருவடித் தாமரைகளைப் பணிந்து வணங்கி எல்லா நலன்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்வோமாக!..

புரந்தரன் போதன் மாதவன் ஆதியோர்கள் துதி 
புரியும் பாதாம் புயமலர்ப் 
புங்கவி புராந்தரி புரந்தகி புராதனி
புராணி திரிபுவனேஸ்வரி

மருந்தினும் நயந்த சொற் பைங்கிளி வராகி எழில் 
வளர் திருக்கடவூரில் வாழ் 
வாமி சுபநேமி புகழ்நாமி சிவசாமி மகிழ் 
வாமி அபிராமி உமையே!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

6 கருத்துகள்:

  1. ஆடி வெள்ளியின் மகத்துவம் அறிந்தேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  2. சதுரங்க சேனாநாயிகாவின் சிறப்புகளுக்கு நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..நம் எல்லாருக்கும் அன்னை ஸ்ரீ வராஹி நல்லருள் புரிவாளாக!..

      நீக்கு
  3. ..மருந்தினும் இனிய சொற்பைங்கிளி வராஹி!.''

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய மேலான வருகை கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி!... தங்களுடைய பாராட்டுதல்கலைப் பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்!..நன்றி!.. மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..