நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 22, 2013

காரைக்காலம்மையார்

சமயக்குரவர்கள் நால்வருள் ஒருவர் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.

இவர் அருளிய திருப்பதிகங்கள் திருப்பாட்டு எனப்படுபவை.

திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

அவற்றுள்ளும் மிகச்சிறப்பானது திருத்தொண்டத் தொகை.

சிவபெருமானின் அன்புக்கு ஆட்பட்டு - அடியவர்களாக விளங்கியவர்களைப் போற்றும் திருப்பதிகம் - திருத்தொண்டத் தொகை.

இதனைப் பின்பற்றியே - பின்னாளில் சேக்கிழார் பெருமான் - பெரிய புராணம் எனும் நூலை இயற்றினார்.

பெரிய புராணம் காட்டும் நாயன்மார்கள் அறுபத்து மூவர்.

பெரும்பாலான சிவாலயங்களின் திருச்சுற்று மண்டபத்தில் அறுபத்து மூவர்
திருமேனிகளைத் தரிசிக்கலாம்.

அறுபத்து மூவரின் திருமேனிகளுள் - ஒருவரின் திருமேனி தவிர - மற்றவர் தம் திருமேனிகள் நின்ற திருக்கோலத்திலேயே திகழ்வன..

அந்த ஒருவர் - மங்கை நல்லாளாகிய புனிதவதி!..

காரைக்கால் அம்மையார் என்று புகழப்பட்டவர்.

ஆனாலும் அவர் - தம்மை காரைக்கால் பேய்!.. என்றே கூறிக் கொள்கின்றார்.

ஏன்!..

இயற்கையின் பல்வேறு கோலங்களில் விரவிக் கிடக்கும் அழகு தானே  மனதிற்கு சந்தோஷத்தினை அளிக்கின்றது!...  

அத்தகைய அழகு -  பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்திருக்கும் பரி பூரண ஆனந்த அழகு - 

பெண்மையில் குடி கொள்ளும் போது  - திருமகள் எனப் பெயர் கொள்கின்றது.

திருமகளைப் போலப் பேரழகு வாய்க்கப் பெற்ற ஒரு பெண் தனக்கு இந்த அழகு வேண்டாம் !.. என்றால்,

அப்படியும் சொல்வார்களா!?... என்ன!...

சொல்லியிருக்கின்றார்களே!..

அப்படிச் சொன்னவர் தான் காரைக்கால் அம்மையார்!..

அதனால் தான் - எல்லாம் வல்ல எம்பெருமானாகிய சிவப்பரம்பொருள் - அம்மையே!.. - என்றழைத்தது!... 

அப்படி சிவபெருமானின் திருவாக்கினால் அம்மையே - என்று அழைக்கப் பட்டதனால் தானே - 


செயற்கரிய செய்த சிவனடியார்களாகிய - நாயன்மார் திருக்கூட்டத்துள் தான் மட்டும் அமர்ந்திருக்கும் தனிப்பெரும் பேற்றினைப் பெற்றார் - பின்னை நாட்களில்!..


''..தாயும் தந்தையும் இல்லாதவன்!..'' எனும் பெருமைக்குரிய ஈசனே - இவர் திருக்கரத்தினால் அமுதூட்டிக் கொள்ள விரும்பி வந்தார் எனில் - 

மெய்யாகவே புனிதத்துவம் நிறையப் பெற்றிருந்த - புனிதவதி அம்மையாரின் திருப்பாதங்களை நாம் - நம் தலையில் சூட்டிக் கொள்ள என்ன தவம் செய்தோமோ!.. 


சோழநாட்டின் கடற்கரை நகரங்களுள் ஒன்றாகிய காரைக்காலில் தனதத்தர் -  தர்மவதி எனும் தம்பதியருக்கு - அவர் செய்த அருந்தவத்தின் நற்பயனாக திருமடந்தை என அவதரித்தவர் புனிதவதி.

தனதத்தர் - காரைக்காலில் பெருவணிகர்.
சிறப்புடன் வணிகம் செய்த சிவபக்தர்.

நற்கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் பயின்று வளர்ந்தார் புனிதவதி.

காலங்கள் மாறிட - திருமணப் பருவம் எய்திய புனிதவதிக்கு-

நாகப்பட்டினத்தில் வணிகம் செய்து வந்த நிதிபதி எனும் வணிகரின் மகனாகிய பரமதத்தனுக்கு, சீரும் சிறப்புடனும் மணமுடித்து வைத்தனர்.  

திருமணத்திற்குப் பின் - தம் கண்ணுக்குக் கண்ணாகிய அருமை மகளைப் பிரிய மனமில்லாத - தனதத்தர்,

''..இங்கேயே - காரைக்காலில் எம் மகளுடன், தாம்  தனி மனையில் தங்கி இல்லறம் எனும் நல்லறத்தினை நாடாத்துங்கள்!...'' - என்று,  தன் அன்பு மருகனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டார்.

பரமதத்தனும் அதற்கிணங்கி- தன் வணிகத்தினை காரைக்காலிலும் விரிவு செய்து கொண்டு அன்பு மனையாளுடன் இனிதிருந்தான்.

புனிதவதியும் பரமதத்தனும் - இல்லறமாகிய நல்லறத்தில் மகிழ்ந்திருந்தனர்.

ஒருநாள் மதியத்திற்குச் சற்று முன்பாக - தனது வேலையாள் மூலமாக இரண்டு மாங்கனிகளை அனுப்பி வைத்தான் பரமதத்தன்.

அந்த வேளையில் -  

எல்லாம் வல்ல சிவம், உலகோர் உணரும்படி - ஒரு திருவிளையாடலை நிகழ்த்துதற்கு - சித்தம் கொண்டு, 

பாருக்கெல்லாம் படியளக்கும் பரமசிவம்  - வயோதிக அடியாராக தானும் ஒரு பாத்திரம் ஏற்று - ஆடுகளமாகிய - பரமதத்தனின் வீடு தேடி வந்து நின்றது.

''சிவாய திருச்சிற்றம்பலம்!..'' - 

தேனாகப் பாய்ந்த குரல் கேட்டு வாசல் வந்த புனிதவதி - அடியாரைக் கண்டு அகமகிழ்ந்து - பாதமலர்களைப் பணிந்து அமுது உண்ண அழைத்தார்.

குணக் குன்றாகிய புனிதவதியாரின் அழைப்பினை ஏற்று இல்லம் நுழைந்தார் அடியவராய் வந்திருக்கும் அருட்கடல்.

அடியார் தம் பாதங்கழுவி வணங்கி - மிகுந்த மரியாதையுடன் அவருக்கு ஆசனம் அளித்து தலைவாழையிலையில் அமுதளித்ததோடு,

சற்று முன் தன் கணவன் ஆள் மூலம் கொடுத்து அனுப்பியிருந்த மாங்கனிகள் இரண்டனுள் ஒன்றினை பக்குவமாக அரிந்து அடியார் தம் இலையில் இட்டார்.

மாங்கனியை அடியவர் விருப்புடன் உண்ணுவதைக் கண்டு மகிழ்ந்தார்.

வயிறார உணவருந்திய அடியார் மனமார வாழ்த்தி திருநீறு வழங்கிச் சென்றார். அது நிகழ்ந்த பின்  - சிறு பொழுதில் -

மதிய உணவருந்த வீடு திரும்பினான் - பரமதத்தன்.

கணவனை வரவேற்ற புனிதவதி,  களைப்பு தீர உபசரித்து அன்புடன் உணவு பரிமாறினார். கணவன் கொடுத்தனுப்பிய  மாங்கனியை  அரிந்து இலையில் இட்டார்.

ஆவலுடன் அதனை உண்ட பரமதத்தன் - மிகவும் சுவையாக இருக்கின்றதே!..   இன்னொன்றையும் கொடு!..'' - எனக் கேட்டான். 

அதிர்ச்சியடைந்த புனிதவதி - உள்ளே ஓடிச் சென்று,  சிக்கலான சூழ்நிலை சீராக வேண்டி - கயிலாய நாதனிடம் கையேந்தி நின்றார். 

ஏந்திய கரங்களில் திருவருட் துணையால் ஒரு மாங்கனி கிடைத்தது. 

ஈசனின் பேருதவியை வியந்த வண்ணம் - அதனை கணவனுக்கு அளித்தார்.

அதனை உண்ட பரமதத்தன் - வியப்பின் எல்லைக்குச் சென்றான். காரணம் - முன்பு எப்போதும் உண்டறியாத சுவையுடன்  இருந்தது அந்தக்கனி..

தான் பெற்ற அனுபவத்தை வியந்து  - தன் மனதில் உண்டான சந்தேகத்தையும் கூறினான். இதற்கு மேல் உண்மையை மறைக்க விரும்பாத புனிதவதி நடந்தவற்றினை விளக்கினார்.

அதிர்ச்சியடைந்த பரமதத்தன் - ''..அங்ஙனமாயின்  வேறு ஒரு மாங்கனியைப் பெற்று என் கண் முன்னே காட்டுக!..'' - என்றான். 

அன்னையும் அவ்வண்ணமே - ஐயனைச் சரணடைந்து கையேந்தி நின்றார்.


ஏந்திய கரங்களில் ஈசன் மீண்டும் ஒரு மாங்கனியினை அருளினான்.

அன்னை அதனை அன்புடன்  - கணவனின் கையில் கொடுத்தார். பரமதத்தன் தன் கையினில் வாங்கினான். விழிகள் வியப்பால் விரிய  - விந்தையினும் விந்தையாக  - மாங்கனியைக் கண்டான்.

கண்ட மாத்திரத்தில் மாங்கனி மறைந்து விட்டது. 

அதிர்ந்தான். அஞ்சினான். அடுத்துப் பேச மொழியின்றி அடங்கினான்.

அப்போதைக்கு அந்த அருஞ்செயலை வியந்தாலும் - தெய்வாம்சம் பொருந்திய புனிதவதியுடன் வாழ்தல் இனி தகாது!.. என, தனக்குள் தானாக முடிவு செய்து -  

சில நாட்கள் கழித்த நிலையில் வணிகத்தின் பொருட்டி வெளியூர் செல்வதாகப் பொய்யுரைத்து வேண்டிய பொருளுடன் மதுரையம்பதியை சென்றடைந்தான்.

நாட்கள் கழிந்தன - மாதங்கள் , வருடங்கள் - என.

வெளியூர் சென்ற கணவனைப் பற்றிய விவரம் ஏதும் அறிய முடியாமல் - சித்தம் எல்லாம் சிவமயமே! - என அறவழியில் நின்றார் புனிதவதியார்.

அங்கும் இங்கும் சென்று வணிகம் செய்வோரால் அறியப்பட்டது - பரமதத்தன் மதுரையில் பெரும் வணிகனாக இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வாழும் செய்தி!...

அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உற்றாரும் புனிதவதியாரை அழைத்துக் கொண்டு - மதுரைக்கே சென்றனர்.  ஊர் எல்லையில் இருந்து கொண்டு தகவல் அனுப்பினர். 

ஓடோடி வந்த பரமதத்தன், தன் மனைவியுடனும் தன் மகளுடனும்  ''..தம்முடைய  கருணையால் நலமுடன் வாழ்கின்றேன். என் மகளுக்கும் தங்கள் திருப்பெயரையே சூட்டியுள்ளேன்!...'' எனக் கூறியபடி புனிதவதியாரின் கால்களில் விழுந்து வணங்கினான்.

இதனைக் கண்ட அத்தனை பேரும் நடுநடுங்கிப் போயினர்.

மனைவியின் கால்களில் கணவன் விழுந்து வணங்குவதாவது?....

அவர்களின் மனம் தெளியும்படி,  அன்று நடந்த அதிசயத்தை விவரித்தான். இதைக் கேட்ட அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.


புனிதவதியார் - கணவனின் செயல் கண்டு மிகுந்த வேதனையடைந்தார்.

மனம் கலங்கிய அவர் - தன் கணவனுக்கு ஆகாத அழகும் இளமையும் தனக்கு எதற்கு?.. ''அழகும் இளமையும் என்னை விட்டு நீங்குக'' - என தன் பேரழகை தானாகவே நீத்தார்.

எவரும் விரும்பாத - எலும்பும் தோலுமான பேயுருவினை ஈசனை வேண்டிப் பெற்றார்.

''..காண்பதெல்லாம் என்ன!..'' - என வியந்து நின்றனர் அனைவரும்.

எல்லாவற்றையும் துறந்து விலகிய அம்மையார் - நாளும் பொழுதும் சிவ வழிபாட்டில் மனம் ஒன்றி இருந்தார்.

திருவருள் கூடிய நிலையில் திருக்கயிலாய தரிசனம் பெற வேண்டி நடந்தார்.

காலங்கள் சென்றன . திருக்கயிலாய மாமலையினை நெருங்கிய வேளையில் திருமலையினில் கால் பதிக்க அஞ்சிய அம்மையார் தலையை வைத்து கைகளால் ஊர்ந்து சென்றார்.

ஐயனின் உடனிருந்து அனைத்தையும் நடத்தும் பாகம் பிரியாதவளாகிய பராசக்தி ஏதும் அறியாதவளைப் போல வியந்து  இறைவனை நோக்கி,

''..பெருமானே தலையினால் நம்மை நோக்கி ஊர்ந்துவரும் இவர் யார்?..'' என வினவினாள்.

சிவபெருமானும்,  ''..அன்பினால் நம்மைப் பேணும் அம்மையாவாள். பேய் வடிவம் நம்மை வேண்டிப் பெற்றனள்!..''  எனக் கூறி,

''..அம்மையே... வருக!..'' என இன்முகத்துடன் செந்தமிழ் கொண்டு புனிதவதியாரை அழைத்தருளினார். 

''..அப்பா!..'' என்றபடி  இறைவனையும் இறைவியையும் தொழுது அவர்தம் திருவடிகளில் விழுந்து வணங்கினார் புனிதவதியார்.

இறைவன் அவரை நோக்கி, ''..நீ நம்மிடம் வேண்டுவது என்ன?...'' எனக் கேட்க
,

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார். (60)


வழித்துணை: 
சேக்கிழார் அருளிய (காரைக்காலம்மையார் புராணம்) பெரிய புராணம்.  

அவ்வண்ணமே நல்கிய பெருமான்,  ''..ரத்ன சபை எனும் திருஆலங்காட்டில் யாம் அருளும் திருக்கூத்தினைக் கண்டு  இன்புறுக!..'' என அருளினார். 


அவ்வாறு ஐயனின் ஆடலைக் கண்டு களிக்கும்போது, திரு ஆலங்காட்டு திருஅந்தாதி, மூத்த திருப்பதிகம், திருஇரட்டைமணிமாலை என சொல்மாலை சூட்டி இன்புற்ற புனிதவதியார் - 

ஐயனின் திருவடித் தாமரையின் கீழ் சிவநிலையினைப் பெற்றார்.  

அம்மையாரின் புகழைப் போற்றும் வண்ணமாக - காரைக்காலில் மாங்கனித் திருவிழா நேற்று (ஜுன் 21)  மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியுள்ளது.

இன்று ஜுன் 22 புனிதவதியார் - பரமதத்தன் திருக்கல்யாணம் நிகழ்கின்றது.

நாளை (ஜுன் 23) இரவு பிக்ஷாடனர் திருவீதியுலாவும், பின் அடுத்தடுத்த எல்லா நிகழ்வுகளுடன் ஜுன் 23 பின்னிரவில் (ஜூன் 24 அதிகாலை) புனிதவதியார் பேயுரு வேண்டிப் பெற்று கயிலாயம் செல்லும் வைபவம் சிறப்புடன் நிகழும்.

அம்மையார் நமக்குக் காட்டிய வழியாக - 

இறைவா!... உன்னை என்றும் மறவாதிருக்க வரம் தருக!.. 
என வேண்டித் தொழுவோம்!.. 

மற்ற அனைத்தையும் ஐயன் அவன் பார்த்துக் கொள்வான்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..
* * *

2 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..