நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 25, 2013

ஸ்ரீ ரங்கநாதன்

பங்குனி உத்திர சேர்த்தி!...

அன்று அதிகாலையில் இருந்தே ஒவ்வொருவர் வீட்டிலும் பரபரப்பு!...

இருக்காதா...பின்னே!... கமலவல்லியின் காதல்  மணாளன், காவிரியின் கரை கடந்து - இது தான் கரை கடந்த வெள்ளம் என்பதா!.. - அதுவும் கமல வல்லியின்  பிறந்த நாளான ஆயில்யத்தன்று உறையூருக்கு வருகின்றான் என்றால் சும்மாவா!... என்ன பரிசு கொண்டு வருகின்றானோ!...

பரிசா... அது எதற்கு?... அவனே ஒரு பரிசு ..   அவன் வருகையே பெரும் பரிசு!...

வழி நெடுகிலும் - இந்த மண்ணுக்கே உரிய பச்சைப் பசேல் என மின்னும் வாழை மரங்கள்  - தோரணங்கள் கட்டியாகி விட்டது!.. வீதியெல்லாம் நீர் தெளித்து வீட்டின் வாசலில் மாக்கோலம் போட்டு, வண்ண மலர்களைத் தூவி அலங்கரித்து நடுவில் குத்து விளக்கும் ஏற்றியாகி விட்டது. நம்ம வீட்டுக்கே மாப்பிள்ளை வருகின்றார்  - என மங்கலத்துடன் மகிழ்ச்சி ஆரவாரம்!...

ஸ்ரீரங்கத்தில் இருந்து  பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள்  கரையில் அம்மா மண்டபம் வழியாக  காவிரிநதியைக் கடந்து, உறையூரை நெருங்கி  வருகிறார். வருகிறார்... இதோ வந்து விட்டார்!... வாண வேடிக்கைகள் ஒருபுறம்!.. மங்கல வாத்தியங்களின் இன்னிசை மறுபுறம்!..

'' வாங்க... மாப்பிள்ள!... வாங்க!..'' - என்று சிறப்பான வரவேற்பு...ஏழ்தலம் புகழ் காவிரிக்கரை வரவேற்பு என்றால் கேட்கவும் வேண்டுமா!...

ஸ்ரீ ரங்கனின் சிந்தை குளிர்கின்றது.. வேண்டுவோர்க்கு வேண்டியதெல்லாம் ப்ரசாதித்துக் கொண்டு, உறையூருக்குள் - வழி மாறிப் பாய்ந்த காவிரி வெள்ளம் போலப் பிரவாகித்த மக்களின் ஊடாக - ஸ்ரீரங்கனின் பல்லக்கு மிதக்கின்றது.

ஆயிற்று.... ஒரு வழியாக கமலவல்லி நாச்சியாரின் ஆலயத் திருவாசலை அடைந்தாயிற்று!...

கோயிலுக்கு வந்து விட்டார் ஸ்வாமி. மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். அன்னம் போல தாயார் வருகிறாள்.. கண்கள் கசிகின்றன காதலால்,

''...நலம்.. நலமறிய ஆவல்..'' என,  ஏககாலத்தில் விழிகளால் பரிமாறிக் கொள்கின்றனர் இருவரும் . அப்படியே ஓடி வந்து கட்டித் தழுவிக் கண்ணீரால் நீராட்ட, கைகள் பரபரத்தாலும் ... பிள்ளைகள் முன்பாகவா!....

ஐயனைக் கண்டு - அன்னையின் கண்களில் ஆதங்கம்...

''...என்ன!... ஒரு நூல் இளைத்த மாதிரி இருக்கிறீர்கள்!.. ஓடி ஓடி ஊருக்கு உழைத்தாலும், நேரத்துக்கு ஒருவாய் சாப்பிட வேண்டாமா!...''

''.. குறை ஒன்றுமில்லை!.. கொடியேற்றத்திலிருந்து - இந்த வாகனம் மாறி அந்த வாகனம்!.. அந்த வாகனம் மாறி இந்த வாகனம்!.. வழி எல்லாம் என்ன வழியாகவா இருக்கிறது - குண்டுங்குழியுமாக!... அன்றைக்குக் கூட வழி நடையாய்   ஜீயபுரத்தில் ஆஸ்தான மண்டப சேவை!... '' - என்ற ஸ்வாமியை, கமலவல்லி மனங்குளிர்ந்து முகம் மலர்ந்து -   வரவேற்றாள்.

மங்கல வாத்தியங்கள் முழங்க ஆலயத்தினுள் பிரவேசித்து பிரகாரத்திலுள்ள சேர்த்தி மண்டபத்திற்கு ஸ்வாமி செல்ல, நாச்சியாரும் பின் தொடர்ந்து -  இருவரும் மணக்கோலத்தில் வீற்றிருந்து சேர்த்தி சேவை சாதிக்கின்றனர்.

ஸ்ரீ கமலவல்லி நாச்சியாருடன் ஸ்ரீ ரங்கராஜன்
'' இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?.. என் பிறந்த நாளும் அதுவுமாக நீங்கள் என் பக்கத்தில் இருப்பதை விட.. '' -  அன்னை இப்படி ஆனந்திக்க,

'' உன் பிறந்த நாளில் உன் பக்கத்தில் இருப்பதை விட, எனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?...'' - என்று ஐயன் குதுகலிக்க,

பொழுது போய் இரவாகி விட்டது. இப்போது -  மணி பத்து..

தாயார் தன் மூலஸ்தானத்திற்குத் திரும்பவேண்டும். ஸ்வாமியும் - ஸ்ரீரங்கம் செல்லவேண்டும். பிரியாவிடை பெற்றுக் கொள்கின்றார். மறுபடியும் சந்திக்க  இன்னும் ... ஒரு வருடமா!.. - அடுத்த சேர்த்தி பற்றி நினக்கின்றது உள்ளம்.

''...என் பங்கு நீ... உன் பங்கு நான்.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி... போய் வரவா!..''

''.. ம்.. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்!....'' - தாயார் மூலஸ்தானத்திற்குத் திரும்ப - ஸ்வாமியின் பல்லக்கு ஸ்ரீரங்கம் நோக்கி விரைகின்றது!...

ஓடோடி  வந்த அரங்கனுக்கு திடுக்கென்றது!. கைவிரலில் இருந்ததே..எங்கே.. போயிற்று?.. கணையாழி.. அவளுக்குத் தெரிந்தால்.. அவள் முதலில் விரலைத் தானே பார்ப்பாள்!.. என்ன செய்வது?...  திரும்பவும் உறையூருக்கா!... வேறு வினையே வேண்டாம்!...''  அரங்கனின் பதற்றத்தைக் கண்டு -

ஒருவர் சொன்னார், ''..நான் கூட பார்த்தேனே!...'' , கணையாழி காணாமல் போன விஷயம் இப்படியே பரவி - உடன் வந்தவர்கள் தேடிப் பார்த்துக் களைப்பதற்குள், அரங்க மாநகரில் யார் காதில் விழவேண்டுமோ - அவர் காதில் சரியாகச் சென்று சேர்ந்து விட்டது.

வேறு வழியின்றி வேர்த்து விறுவிறுத்து உள்ளே நுழைந்து - ரங்கநாயகியைத் தேடி வந்தால் - அந்த நேரம் பார்த்து, அடையா நெடுங்கதவு அடைத்துக் கொண்டது - '' படார் '' என்று... பழைய காலத்துக் கதவாயிற்றே - என்றுகூட பார்க்கவில்லை!... அத்தனை கோபம்!... அரங்கநாயகிக்கு...

உறையூருக்குப் போனது தப்பு இல்லை!... கமலவல்லியின் கரங்களைப் பற்றியது கூட தப்பு இல்லை!... கணையாழி காணாமல் போனதுதான் தப்பு!.. என்ன .. கஷ்டமடா சாமீ!... அது அவள் பாற்கடலில் தோன்றினாள் அல்லவா!... அப்போது தாய் வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்த கணையாழி!... அது தான் இத்தனைக்கும் காரணம்!...

''...இப்படிப் பொறுப்பில்லாமல் போற இடத்தில தொலைத்து விட்டு வந்தால் சும்மா இருக்க முடியுமா!...'' - ஒரே கூச்சல்.. ஆரவாரம்!...

''...ஆஹா!.. யாரது இவங்க எல்லாம்!....''

''...பொண்ணு வீட்டுக்காரங்களாம்... பேச வந்திருக்காங்க!....''

''...ஏன்... அவங்க பொண்ணுக்குப் பேசத் தெரியாதுன்னா?...''

''... சரி.. சரி.. விடுப்பா.. நம்ம பக்கம் தப்பு இருக்கு!...''

அரங்கன் திகைத்தான். ''..என்ன சொல்கின்றான் இவன். உப்பே வேண்டாம் என ஏற்றுக் கொண்டேனே!.. என்னிடமா.. தப்பு!...''

அதற்குள் உள்ளேயிருந்து ஏதேதோ வந்து அரங்கனின் மேலே விழுது!... விழுதா?... ஆமாம்!... அன்பின் விழுதாக அரங்கனின் மேல் வந்து விழுந்தன பூக்களும் வெண்ணெய் உருண்டைகளும் ....அதெல்லாம் கூட பரவாயில்லை..

கதவைச் சாத்தியது கூட சரிதான்!... 

கையில் கிடைத்த வாழை மட்டையால் சாத்தலாமா!....

அரங்கன் பரிதவித்துப் போனான்!... அந்த நேரம் பார்த்து அருகில் ஒரு பல்லக்கு வந்து நிற்க  -  உள்ளிருந்து பதைபதைப்புடன் இறங்கினார் - நம்மாழ்வார்...

அவருக்கு மனசு தாங்கவில்லை. அண்ட பகிரண்டமும் அரற்றியவாறு, காணக் கிடக்கும் அவன்  - திருமேனி முழுதும் வேர்த்து அழகெல்லாம் கலைந்து, ஒரு குழந்தையைப் போல விக்கித்து நிற்கின்றானே!.. அரங்கனுக்கா இந்த நிலை!..

விறுவிறு - என்று பிராட்டியாரின் வாசல் திருக்கதவைத் தட்டுகிறார்.

''..ஆயிரம்தான் இருந்தாலும் இதைப்போல நீ செய்யலாமா!... கமலவல்லியின் கரம் பிடிக்க மனம் உவந்தவளும் நீ!.. இப்போது மட்டையால் அடிப்பவளும் நீ!.. நீ இன்றி அவளில்லை!... அவளின்றி நீ இல்லை!... அனைத்தும் அறிந்த நீ அரங்கனை  அவமானப்படுத்துகிறாயே...  நியாயமா?.. அம்மா?..." -

ஆழ்வாருக்குத் தொண்டையை அடைத்தது.

''...உறையூரில் கமலவல்லி கரத்தினைப் பற்றியிருந்த வேளையில் கூட, உன் நினைவையும் அல்லவா அரங்கன் பற்றியிருந்தான்!.. அந்த நினைவுக்கு நீ தரும் பரிசு இதுதானா?.. பார்.. உன் நினைவில் பால்பழங்கூட உண்ணாமல், ஓடி வந்தவனின் முகத்தைப் பார்... உண்ட மயக்கம் தொண்டருக்கு.. ஆனால் தொண்டருக்கெல்லாம் தொண்டன் -  உண்ணாமல் மயங்கியிருப்பதைப் பார்!..''

இதற்குமேல் தாங்கிக் கொள்ளமுடியவில்லை அரங்கநாயகிக்கு... '' இதை அப்பவே சொல்றதுக்கென்ன!. இன்னும் சாப்பிடலைன்னு!... கணையாழி போனாப்  போறது!... நீங்க வாங்க!....''

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்! அதனால்- தாள் எல்லாம் தூள் ஆனது!

அரங்கன் புன்னகைத்தான்...  அரங்கநாயகி புன்னகைத்தாள்... ஆழ்வாரும் புன்னகைத்தார்... அவர்களுடன் அண்ட பகிரண்டமும் புன்னகைத்தது!...

அரங்கநாயகி  சொன்னாள், ''இதுக்காக யாராவது பெரியவங்களைத் தொந்தரவு செய்வார்களோ? சரியான பைத்தியம்!..'' அரங்கனும் நாச்சியாரும் சேர்த்தியாய் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்தார்கள்!...

அன்பினில் கலந்த இருவரும், அகளங்கன் திருச்சுற்றில் வில்வ மரத்தடியில் மாதவிப்பந்தல் எனும் மல்லிகைப்பந்தலின் கீழ், ''சேர்த்தி மண்டபத்தில்'' ஒன்றாக எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதித்து இன்புற்றனர். அவர்தம் அன்பினில் அனைத்துலகும் இன்புற்றது.

ஸ்ரீ ரங்கநாயகியுடன் ஸ்ரீ ரங்கராஜன்
இதுவே பங்குனி உத்திர சேர்த்தி சேவை!...

*  *  *

அது சரி... காணாமல் போன  கணையாழி கிடைக்கவே... இல்லையா!....

அது எப்போது காணாமல் போனது ?... இப்போது கிடைப்பதற்கு!... அரங்கனும் அரங்கநாயகியும் சேர்ந்து நடத்திய நாடகம் தான் மட்டையடி!.... கணையாழி இப்போதும் அரங்கனின் விரலில் பத்திரமாக உள்ளது!...

*  *  *

பின்வந்த நாட்களில் ஸ்ரீ ராமானுஜர் - இந்த சேர்த்தி வேளையில் தான் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் (கத்ய த்ரயம்) பாடியருளி அரங்கனைச் சேவித்தார். இன்றும் அரையர் சேவையில் நிகழ்வுறுகின்றது.

பின்பு 18 முறை திருமஞ்சனம்  நடைபெறுகிறது. ஒருமுறைக்கு ஆறு  என  மொத்தம் 108 கலசங்கள். மறுநாள் பங்குனித் தேரோட்டம். அதனுடன் மங்களகரமான பங்குனி உத்திரப் பெருவிழா இனிதே நிறைவுறுகின்றது!..

உத்திரத்தன்று சக்திக்கேற்ப- சர்க்கரைப் பொங்கலும், வெண்ணெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் சேர்த்த திருஅமுதும் நிவேதனம் செய்வது மரபு.

அங்குமிங்குமாகத் திரட்டிய தகவல்களுடன் - மாதவிப்பந்தலுக்கும் நன்றி!..

அடியவர் குழாமும் வாழ்க!...அரங்க மாநகரும் வாழ்க!...
அரங்கனும் வாழ்க!... அன்னையும் வாழ்க!...
அவர் தம் அன்பினில் அவனியும் வாழ்க!..

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்..
      நன்றி.. நன்றி..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..