நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 22, 2013

திருப்பதிகம் - 05

ஓம் நமசிவாய!..


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்

திருத்தலம் 
திருஐயாறு 

இறைவன் - ஸ்ரீஐயாறப்பர்
அம்பிகை - ஸ்ரீஅறம் வளர்த்தநாயகி
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி


-: தலப்பெருமை :-

வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி எனும் ஐந்து நதிகள் அணி செய்யும் திருத்தலம்.

நந்தியம்பெருமான் சிலாத முனிவருக்கு மகனாகப் பிறந்து திருமழபாடியில் திருமணம் கொள்ள  - மணமக்களை எதிர்கொண்டழைக்கும் சப்தஸ்தானம் எனும் ஏழூர் திருவிழா நடைபெறும் திருத்தலம்.

திருநாவுக்கரசருக்கு ஆடி அமாவாசை தினத்தன்று ஈசன் திருக்கயிலாயக் காட்சி நல்கிய திருத்தலம்.


திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்.
ஆறாம் திருமுறை - திருப்பதிக எண் - 38

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம்  ஆனாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

நோக்கரிய திருமேனி உடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல்வரைவான் ஆகாயம் ஆனாய் நீயே
தனத்தகத்துக் தலைகலனாக் கொண்டாய் நீயே
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

வானுற்ற மாமலைகள் ஆனாய் நீயே
வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற வொளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மட வாள் பங்கன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்சம்  உண்டாய் நீயே
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 

உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 

எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 

ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அளவில் பெருமை உடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
வாரா உலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் அடிபரவ நின்றாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லுநஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோள்விட் டெரியாடல் உகந்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

ஆரு மறியா இடத்தாய் நீயே
ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன்
பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே
ஒண்டா மரையானும் மாலுந் கூடித்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
 
  
திருச்சிற்றம்பம்!..
* * *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..