நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 16, 2013

மகரஜோதி

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...


கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து, விரதம் மேற்கொண்ட விநாடி  முதற்கொண்டு மகர ஜோதியினைத் தரிசிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன்  இருந்த பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி கொள்ளும் நாள்.

கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக - 

ஐயப்ப பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும் மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனம் 14-ஆம் தேதி நடந்தது.  


பந்தளம் அரண்மனையில் இருந்து கடந்த 12-ஆம் தேதி புறப்பட்ட திருஆபரண பவனி திங்கள் மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் சென்று முறைப்படியாக வரவேற்று அழைத்து வர,

திருஆபரண பவனி 6.25 மணி அளவில், 

பக்தர்களின் சரணகோஷத்துடன் பதினெட்டாம்படி வழியாக திருஆபரணப் பெட்டி சன்னிதானத்தை வந்தடைந்தது. மற்ற இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.

திருஆபரணப்பெட்டியினை ஸ்ரீகோயிலின் முன்பாக - தந்திரியும், மேல்சாந்தியும் பெற்றுக் கொண்டு திருநடையினை அடைத்தனர். 

தொடர்ந்து திருஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. 


சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருக்க - மாலை 6.35 மணிக்கு தீபாராதனை முடிந்த சில விநாடிகளில் 6.38 மணிக்கு மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் ''சுவாமியே சரணம் ஐயப்பா'' என பரவசத்துடன் கோஷமிட்டனர். 

மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது.

சபரிமலையை சுற்றி குவிந்திருந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், பக்தி பரசவத்துடன் ஜோதியை தரிசித்தனர். பக்தர்களின் சரண கோஷம் சபரிமலை முழுவதும் எதிரொலித்தது.

ஜோதியை கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலை இறங்கினர். 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 20ம் தேதி வரை திறந்திருக்கும். ஆனால், 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப் படுவார்கள். 20ம் தேதி காலை பந்தளம் ராஜ பிரதிநிதிக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. அன்று காலை 7 மணியளவில் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் இந்தாண்டு மகர விளக்கு பூஜாகாலம் நிறைவு பெறும்.

விரத காலத்தில் பக்தர்களாகிய நாங்கள் அனுசரித்த நல்ல பழக்க வழக்கங்களுடன் கூடிய நெறிமுறைகள் என்றென்றும் எங்கள் மனதினில்  பதிந்திருக்கவும்,  

எங்களுக்கும் - எங்களால் பிறருக்கும் நன்மைகள் விளையவும்,

எங்கள் வாழ்க்கை மேன்மேலும் சிறப்படையவும் நல்லருள் புரிவாய் ஐயப்பா!....

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...

Images - Thanks to Google

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..