நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 11, 2012

மார்கழித் திங்கள்


தேவர்களின் வைகறைப் பொழுது

''மாதங்களில் நான் மார்கழி'' - என்பது பரந்தாமனின் திருவாக்கு. 

மாதவனே மார்கழி!... மார்கழியே மாதவன்!... எனும் போது மார்கழியின் பெருமை தான் என்னே!... 

மார்கழியை உடையவனாக மாதவன். அந்த மாதவனை உடையவனாக மகாதேவன்!...எப்படி?....
சைவசித்தாந்த மரபானது,  எல்லாம் வல்ல சிவபெருமான் - 
சாந்தம் கொண்டு திகழ்கையில் - உமா
கோபத்துடன் எழுந்தருள்கையில் - காளி  
போர்க்கோலம் பூணுகையில் - துர்கா 
புருஷத்துவத்துடன் பொலிகையில் - விஷ்ணு 
என்று நான்கு சக்திகளுடன் விளங்குவதாகப் புகழ்ந்துரைக்கும்.

இந்த வகையில் சிவபெருமானின் சக்தியாக மஹாவிஷ்ணு விளங்குவதை - நாவுக்கரசராகிய அப்பர் சுவாமிகள்,

திருஐயாற்றுத் திருப்பதிகத்தில் ''அரி அல்லால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே''  (திரு.4-40-5) என்றும்,

தில்லையம்பதித் திருப்பதிகத்தில் ''மையரிக் கண்ணியாளும் மாலும் ஓர் பாகமாகி''  (திரு.4-22-4) என்றும் பாடிப் பரவுகின்றனர்.

சிவபெருமான் - உடல், திருமால்(சக்தி) உயிர்  என்று நம் தலைமேற்கொள்ளல்  - அரியும் அரனும் ஒன்றே என்பதாம். 

அம்மையும் அப்பனும் மாதொருபாகன் எனும் திருக்கோலம் கொண்டதைப் போல  சிவபெருமானும் திருமாலும் ''சங்கரநாராயண'' - திருக்கோலம்  கொண்டு விளங்குவதை நாம் அறிவோம் தானே!..

இதனையே திருமங்கை ஆழ்வாரும், ''பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து'' - என்று சிறப்பிக்கின்றார்.

பேயாழ்வார் தம் திருவாக்கில் -

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து (2344)
- என்று நமக்கு உணர்த்துவதும் ''சங்கரநாராயண'' - திருக்கோலத்தைத் தான்.

இத்தனை பெருமைக்குரிய மார்கழி தான் உத்ராயண புண்ய காலத்திற்குக் கட்டியம் கூறும் தவநிலை மாதம்.  தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமே மார்கழி. பூமியில் மானிடர்க்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள். அந்த ஒருநாளின் பூபாளப் பொழுதுதான் மார்கழி மாதம். 

பொழுது புலர்வதற்கு முன்னுள்ள பொழுது ''பிரும்மமுகூர்த்தம்'' என்று குறிப்பிடப்படுகிறது. இதையே வைகறைப் பொழுது என்பர். விடியலுக்கு முன் உறக்கத்திலிருந்து எழுந்து, ஆறு -  குளம்  அல்லது சுத்தமான நீரில் நீராடி,  தெய்வங்களை வழிட்டு வேண்டுவனவற்றை வேண்டியவாறு பெறுவதற்கு மிகப் பொருத்தமான நேரம். விடியற்காலை வழிபாடு எப்போதுமே சிறந்தது.

அதிகாலையில் நீராடினால் உடல் சுறுசுறுப்படைந்து, உள்ளம்  தெளிவு பெற்று இயற்கையாகவே நம்முள் ஆற்றல் பெருகுவதை நாம் உணரலாம். காரணம் வைகறைப் பொழுதில் வளி மண்டலத்தில் அடர்த்தியாக பரவிக் கிடக்கும் ஓசோன் வாயு. வெள்ளென வெளுக்கும் முன் மனதை ஒருமைப்படுத்தி சற்று நேரம் தியானத்தில் அமர்ந்தால் - கிடைத்தற்கு அரியன எல்லாம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு .. 

ஒளவையாரும் அதற்குத்தானே ''வைகறைத் துயில் எழு'' என்று அறிவுறுத்துகிறார்..

வழிபாட்டுக்கு ஏற்ற காலமாகிய பிரும்மமுகூர்த்தம் எனப்படும் வைகறையில் எழுந்து நீராடி இறைவனை வணங்கினால் , அகத்தில் ஆனந்தம் துலங்கும் - புறத்தில் ஆரோக்கியம் விளங்கும்.

இப்படிப்பட்ட மார்கழியில் - தேவர்களுக்கு விடியற்காலைப் பொழுதான மார்கழியில் - தெய்வங்களை வழிபட்டு - நம்மை நாமே உயர்த்திக் கொள்வதற்கான உத்திகள் தான் வைகுந்த ஏகாதசியும் திருஆதிரையும். அதன் பொருட்டே பன்னெடுங்காலமாக நம் மக்கள் மார்கழியில் பவித்ரமான நோன்புகளை அனுசரித்து வருகின்றனர்.   

மார்கழியைப் பீடை மாதம் என்றும் பலர் குறிப்பிடுவர். மார்கழியில் நல்ல காரியங்களைத் தவிர்த்து விடுவர். மார்கழியின் பனியும் குளிர்ச்சியும் சிலருக்கு  ஒத்துக்கொள்ளாமல் சிறு சிறு நோய்களும் தொல்லைகளும் விளையும். அதன் பொருட்டு அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கலாம்.

அதைத் தவிர்த்து , பன்னிரு மாதங்களில் மிக்க  பீடு - பெருமையை உடையது   மார்கழியே!.. 

மார்கழியில் தான் - மனிதம் புனிதம் பெறுவதற்காக

வைணவ நெறியில் நின்ற ஆண்டாள் ''திருப்பாவை'' பாடியருளினாள். 
சிவ நெறியில் நின்ற மாணிக்கவாசகர் ''திருவெம்பாவை'' பாடியருளினார். 

இந்த இரண்டு நூல்களுமே - நல்ல மணாளன் தமக்கு வாழ்க்கைத் துணையாக வாய்க்க வேண்டி, கன்னியர் நோற்கும் பாவை நோன்பினைப் பற்றிப் பாடுகின்றன. 

அரங்கன் உறையும் திருஅரங்கத்தில் மற்றும் பல திவ்யதேசங்களில் மார்கழியில் ஆண்டாள் அருளிய திருப்பாவையை அனுசரித்தும் ராப்பத்து, பகல்பத்து என்ற அளவில் ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரத் திவ்ய ப்ரபந்தத்தினை  பாராயணம் செய்தும் அடியார்கள் உய்வடைகின்றனர்.

தில்லையில் மற்றும் பல சிவ ஆலயங்களில் திருஆதிரை நாளை பத்தாம் நாளாகக் கொண்டு - மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருவெம்பாவையினை ஓதி பெரும் பேறடைகின்றனர். 

வடமொழியில் மார்கழியை ''மார்கசீர்ஷ''- தலைசிறந்த வழி - என்னும் பொருளில் குறிக்கின்றனர். 

மார்கழி வந்து விட்டால் வாசல் நிறைய மங்களகரமாகக் கோலமிடுவர். முந்தைய நாட்களில் வெண்மையான பச்சரிசி மாவினால் இழை இழையாய்க் கோலமிட்டு அதன் நடுவில் ஒரு சிறு உருண்டையாய் பசுஞ்சாணத்தில் பூசணிப்பூவினை வைத்து அகல்விளக்கேற்றி வைப்பார்கள். வீட்டு வாசலில் கோலத்தின் நடுவே பூசணிப் பூவை வைப்பது - (கன்னிப்பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத அந்தக் கால சூழ்நிலையில்) வீட்டில் கன்னிப் பெண்கள் இருக்கின்றார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகும்.. நாளும் கோலத்தினை வேடிக்கை பார்க்கும் சாக்கில் பெண் பேசி முடித்து அடுத்து வரும் ''தைத்திங்களில்'' மணவிழா கூடுவதும் உண்டு.

பூசணிப்பூவின் மஞ்சள் வண்ணமும் அருகம்புல்லின் பசுமையும், விளக்கின் சுடரும் மங்கலத்தின் சின்னங்கள். 

எறும்பு முதலான சிற்றுயிர்களிடம் நாம் கொண்டுள்ள கருணையே - வாசல் வழி எங்கும் அரிசி மாவினால் இடப்படும் கோலங்கள்.
ஆக, காணும் இடம் எங்கும் பக்தியும் மகிழ்ச்சியும் மங்கலமும்,  பெருவெள்ளம் எனப் பொங்கித் ததும்பும் எனில், காரணம் - 

மாதவனே மார்கழி!... மார்கழியே மாதவன்!... 
ஹரியே சரணம்!.. ஹரனே சரணம்!.. ஹரி ஹர சிவமே சரணம்!. சரணம்!..

4 கருத்துகள்:

  1. அன்பின் துரை செல்வராஜு

    மார்கழித் திங்கள் பதிவு அருமை. பல்வேறு செய்திகளை அள்ளித் தெளித்து பதிவைனைக் கொண்டு செல்கிற விதம் நன்று.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!..
      தாங்கள் வருகை தந்து இனிய கருத்துரை வழங்கி வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. மார்கழி மாதம் பற்றிய தகவல்கள் அருமை!
    வலைச்சர ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா.. தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..